
வரலாற்று உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. இனி ஆட்டமே வேற..!
சர்வதேச முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீடு காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது. இந்த வாரத்தின் துவக்கத்திலேயே உயர்வுடன் துவங்கி தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வரும் வேளையில் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் உள்ளது.
சர்வதேச முதலீட்டு சந்தையில் மந்த நிலை நிலவும் காரணத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக வளர்ச்சி அடையும் வெளிநாட்டு சந்தையில் முதலீடு செய்ய தயாரான நிவையில், 100க்கு 90 பேரின் கவனம் இந்தியா மீது திரும்பியுள்ளது.
உலக நாடுகளில் ரெசிஷன் அச்சம் தலைவிரித்தாடும் நிலையில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் சாதகமாக உள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமுடன் முதலீடு செய்கின்றனர்
இதன் மூலம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 137 வர்த்தக நாட்களுக்கு பின்பு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தில் 250 புள்ளிகளுக்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்த நிலையில் சென்செக்ஸ் அதன் வரலாற்று உச்ச அளவான 63588.31 புள்ளிகளை அடைந்துள்ளது. ஆனால் அடுத்த சில நிமிடத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களும், சில வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் வரலாற்று உச்ச அளவீட்டை பணமாக்க முடிவு செய்து அதிகப்படியான பங்கு இருப்பை விற்பனை செய்ய துவங்கினர். இதனால் 11.18 மணியளவில் சென்செக்ஸ் 10 புள்ளிகள் சரிவுடன் 63,326 புள்ளிகளை அடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 63,467 புள்ளிகளில் துவங்கி, 63588.31 புள்ளிகள் வரையில் உயர்வு வரலாற்று உச்ச அளவீட்டை தொட்டு உள்ளது. சென்செக்ஸ் குறியீடு 52 வார உயர்வு, வரலாற்று உச்சம் அளவான 63588.31 புள்ளிகளை எட்டியுள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் நேற்று 7 வருட உச்சத்தை தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள் இன்று மோசமாகவும், அதிகப்படியாகவும் 1.06 சதவீதம் சரிந்து 576.90 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ஐடிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி ஆகியவை 0.50 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது.