
ஆசியக் கோப்பை.. முடிவு எடுத்துவிட்டார்கள்.. இனி ஒன்றும் செய்ய முடியாது.. பல்டி அடித்த பாக்!
கராச்சி: ஆசியக் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்துவதில் விருப்பமில்லை என்றாலும், ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டதால் அதில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என்று பாகிஸ்தானின் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்.17ஆம் தேதி வரை நடக்க உள்ளது. 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கு பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளும் ஒப்புதல் கூறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு வழியாக ஹைபிரிட் மாடலில் ஆசியக் கோப்பையை நடத்த அனைத்து நாடுகளும் முன் வந்ததால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.ஏனென்றால் கடந்த 8 மாதத்திற்கும் மேலாக ஆசியக் கோப்பை விவகாரம் ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தானிற்கு வரவில்லை என்றால், உலகக்கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வராது என்று கூறி வந்தனர். ஒரு வழியாக பிரச்சனை ஓய்ந்ததாக ரசிகர்கள் கருதி வந்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜீம் சேதி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து பிசிபி சேர்மேன் பதவிக்கு அஷ்ரப் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே பிசிபி நிர்வாகத்தில் ஏராளமான பொறுப்புகளை வகித்து வந்தவர். இவர் ஆசியக் கோப்பையை பாகிஸ்தானில் மட்டும் நடத்தினால் ஹைபிரிட் மாடலில் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆசியக் கோப்பை விவகாரம் மீண்டும் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அஷ்ரப் கூறியுள்ளார். அதில், என்னை பொறுத்தவரை ஆசியக் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்துவதால் பாகிஸ்தானுக்கு எந்த சாதகமான அம்சமும் இல்லை. தொடரை நடத்தும் நாடாக இருக்கும் பாகிஸ்தான், இன்னும் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கலாம். பூடான், நேபாளம் அணிகள் மட்டுமே பாகிஸ்தானில் விளையாட உள்ளன. இலங்கையில் தான் முக்கிய அணிகள் விளையாடுகின்றன. ஆனால் ஆசியக் கோப்பை தொடர் குறித்து அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுவிட்டன. அதனால் அதில் மாற்றங்கள் கோர விரும்பவில்லை. ஏற்கனவே நிர்வாகத்தில் இருந்தவர்கள் எடுத்த முடிவுகளை மதிக்கிறேன். ஆனால் வருங்காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எது நல்லதோ, அந்த முடிவுகளை மட்டுமே நாங்கள் எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். நேற்று ஆசியக் கோப்பை ஹைபிரிட் மாடலில் நடக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒரே நாளில் அஷ்ரப் பல்டி அடித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.