மற்றவைவிவசாய செய்திகள்

உ.பி.யில் ‘க்ளைமெட் ஸ்மார்ட்’ கிராமங்கள்.. விவசாயிகளுக்காகவே தனி வானிலை ஆய்வு மையம்

லக்னோ: மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில், உத்தரபிரதேச அரசோ சற்று வித்தியாசமாக யோசித்து ‘க்ளைமெட் ஸ்மார்ட்’ கிராமங்கள் (Climate Smart Villages) என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த ‘க்ளைமெட் ஸ்மார்ட்’ கிராமம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்காகவே பிரத்யேக வானிலை ஆய்வு மையம், சோலார் மின் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

பருவநிலை மாற்றம் தனது கோர முகத்தை காண்பிக்க தொடங்குவதற்கு முன்பாக, விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் நோக்கில் இந்த முன்மாதிரி திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு.

மிரட்டும் பருவநிலை மாற்றம் எதிர்காலத்தில் மனித குலத்துக்கு பேராபத்தாக மாறப்போவது அணு குண்டுகளோ, உயிரியல் ஆயுதங்களோ அல்ல.. பருவநிலை மாற்றம்தான் (Climate Change) என உறுதியாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள். உலக வெப்பமயமாதல் புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து வருவதால் பருவநிலை மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பருவமழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் சுட்டெரிப்பதும், வெயில் இருக்க வேண்டிய காலத்தில் கனமழை கொட்டி தீர்ப்பதுமே இதன் சமிக்ஞைகள். இந்த மாற்றம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே ஏற்பட தொடங்கிவிட்டது. இந்த பருவநிலை மாற்றம் ஒரு நாட்டையே நிர்மூலமாக்கிவிடும். அதற்கு சமீபத்திய உதாரணம்தான் பாகிஸ்தான்

‘க்ளைமெட் ஸ்மார்ட்’ கிராமங்கள் இந்தப் பருவநிலை மாற்றத்தால் நாம் எதிர்கொள்ளும் ஆபத்துகள் பல. அவற்றில் முக்கியமானது உணவுப்பஞ்சம். பருவமழை பொய்த்தாலோ, சாகுபடி நேரத்தில் பேய் மழை பெய்தாலோ விவசாயம் அழிந்துவிடும். இதனைக் கருத்தில்கொண்டு, மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் உத்தரபிரதேச அரசு கொண்டு வந்திருக்கும் திட்டம்தான் இந்த ‘க்ளைமெட் ஸ்மார்ட்’ கிராமத் திட்டம். பருவநிலை மாற்றத்தில் இருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம். இதற்காக விஞ்ஞானப்பூர்வமாக பல தொழில்நுட்பங்கள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

கிராம வானிலை ஆய்வு மையம் உத்தரபிரதேசத்தில் முதல்கட்டமாக 39 கிராமங்கள் இந்த ‘க்ளைமெட் ஸ்மார்ட்’ கிராமம் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 10 கிராமங்களில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன. இந்த திட்டத்தின்படி, மாநில அளவில் இயங்கி வரும் வானிலை ஆய்வு மையத்தை போலவே கிராம அளவில் வானிலை ஆய்வு மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திடீர் மழை, வெள்ளம், புயல் ஆகியவை குறித்து உடனடியாக விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்படும். எனவே, விவசாயிகளால் தங்கள் பயிர்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

பிரத்யேக நிபுணர் குழுக்கள் அதுமட்டுமல்லாமல், பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் திறன் கொண்ட பயிர்கள் மற்றும் காய்கறிகளை அடையாளம் கண்டு விவசாயிகளுக்கு தெரிவிக்க வல்லுநர் குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், தண்ணீரை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பம் (சொட்டு நீர் பாசனம் உட்பட), மின் சேமிப்பு தொழிநுட்பம், சோலார் மின் உற்பத்தியை அதிகரிப்பது போன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ள பிரத்யேக நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உத்தரபிரதேச பருவநிலை மாற்ற ஆணையத்தின் கீழ் (Uttar Pradesh Climate Change Authority) செயல்படுவார்கள்.

விவசாயிகளை தேடி வந்து ஆலோசனை மேலும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்காக எந்தெந்த பயிர்களுக்கு எதை ஊடுபயிர்களாக பயன்படுத்துவது, எந்தெந்த பருவநிலையில் என்னென்ன பயிர்களை வளர்க்கலாம் என்பது குறித்து அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொண்டு, விவசாயிகளை தேடி வந்து நிபுணர்கள் தெரிவிப்பார்கள். மேலும், விவசாயிகள் லாபம் அடைவதற்காக அவர்களின் நிலத்தின் மூன்றில் ஒருபகுதியில் அதிக லாபம் தரும் பயிர்களை தனியாக வளர்க்கும் முறையையும் விஞ்ஞானிகள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கார்ப்பரெட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த ‘க்ளைமெட் ஸ்மார்ட்’ கிராமத் திட்டத்தை உத்தரபிரதேச அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. பருவநிலை மாற்றம் விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் முன்பே, மற்ற மாநிலங்களும் இந்த முன்மாதிரி திட்டத்தை பின்பற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button