
ஒரே நாளில் ரூ.100 கோடி இழந்த அமேசான் ஓனர்.. அதானி காட்டில் மழை! உலகின் 3வது பெரிய பணக்காரராக உயர்வு
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஒரே நாளில் ரூ.100 கோடியை இழந்துள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த கவுதம் அதானி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி இமாலய வளர்ச்சியை அடைந்து வருகிறார். எரிசக்தி, துறைமுகம், விமான நிலையம், தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்து வருகிறது அதானி குழுமம்.
தொழில்துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வரும் கவுதம் அதானி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானியை முறியடித்தார்.
உலக பணக்காரர்கள்
இந்தியாவை தாண்டி ஆசிய பணக்காரர்கள் பட்டியலிலும் முன்னிலைக்கு சென்ற அதானி அதில் முதலிடத்தையும் பிடித்தார். மேலும் உலகின் பெரும் பெரும் கோடீஸ்வரர்களை கொண்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறினார் அதானி.
4வது இடம்
மேலும் அதானியின் முதலீடுகள், தொழில்கள் இந்தியா உட்பட உலக நாடுகளில் வளர்ச்சியடைய தொடங்கின. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் மேலும் படிப்படியாக முன்னேறி கடந்த ஜூலை மாதம் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறினார்.
3 வது இடம்
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் அதானியின் சொத்து மதிப்பு 137.4 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதன் மூலம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வந்த பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்.
சரிந்த பெசோஸ்
இதனை தொடர்ந்து மீண்டும் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு உயர்ந்ததால் கவுதம் அதானி 4 வது இடத்திற்கே தள்ளப்பட்டார். இந்த சூழலில் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் நேற்று ஒரே நாளில் 100 கோடியை பங்கு வர்த்தகத்தில் இழந்தார்.
மேலும் முன்னேறிய
அதானி இதனால், ஜெஃப் பெசோஸ் 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் 3 வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். முதலிடத்தில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்கும், 2 வது இடத்தில் பெர்னார்ட் அர்னால்டும் உள்ளனர்.