
காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு 20வது தங்கம்.. பேட்மிண்டனில் 20 வயது இளைஞர் அசத்தல்.. முழு விவரம்
பிர்மிங்காம்: 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா 20 வது தங்கத்தை வென்றது.
பேட்மிண்டன் விளையாட்டில் இந்திய மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து ஏற்கனவே தங்கம் வென்ற நிலையில், தற்போது ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் லக்சயா சென் தங்கம் வென்று இருக்கிறார்.
இதன் மூலம் , பேட்மிண்டன் உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் 20 வயதான இந்திய வீரர் லக்சயா சென், மலேசிய வீரர் யாங்கை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இருவரும் ஆக்கோரஷமாக விளையாடி புள்ளிகளை பெற்றனர். முதல் செட்டில் லக்சயா சென், செய்த சில தவறை பயன்படுத்தி கொண்ட மலேசிய வீரர் யாங் முதல் செட்டை 21க்கு 19 என்ற கணக்கில் வென்றார்.
இதனையடுத்து, 2வது செட்டில், தனது முழு சக்தியையும் திரட்டி லக்சயா சென் விளையாடி, மலேசிய வீரருக்கு அதிர்ச்சி அளித்தார். சுழன்று சுழன்று அடித்த லக்சயா சென் 2வது செட்டை 21க்கு9 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதனை தொடர்ந்து போட்டியை தீர்மானிக்கும் கடைசி செட் நடைபெற்றது.
இதிலும் லக்சயா சென் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை குவித்தார். அப்போது மலேசிய வீரர் யாங்க்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் போட்டியில் தொடர்ந்தார். எனினும் லக்சயா சென் அதற்குள் வெற்றி அருகே வந்துவிட்டார். இதனையடுத்து சில நொடிகளிலேயே 21க்கு16 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை லக்சயா சென் கைப்பற்றினார். ஒரு மணி நேரம் 21 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் லக்சயா சென் தங்கம் வென்று அசத்தினார்.