அரசியல்இந்திய செய்திகள்மற்றவை

“கிளம்பி வாங்க”.. ஓபிஎஸ் “தலைவர்” ஆகிறாரா.. ஆஹா, இதுக்குதான் இத்தனை கால “இடைவெளி”?.. அப்ப எடப்பாடி?

சென்னை: ஓபிஎஸ் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்க போகிறது? என்ற ஆர்வம் முக்குலத்தோர் மத்தியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அதிமுகவுக்குள்ளும் எழுந்துள்ளது.. காரணம், இதற்கான “புள்ளி”யை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வைத்துள்ளதாக தெரிகிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த 20ம் தேதி நடைபெற்றது..

இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

என்ன காரணம்: இந்த கூட்டத்தில், திமுகவுக்கு எதிரான தீர்மானங்கள் பல இயற்றப்பட்டன.. இந்த கூட்டத்தில் தினகரன் பேசியபோது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒன்றாக இணைந்துதான் செயல்பட போகிறோம், மறுபடியும் அவரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச இருக்கிறோம் என்று சொன்னாரே தவிர, விரிவாக எந்த விஷயத்தையும் பேசவில்லை..
ஆனால், பொதுச்செயலாளர், தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதற்காக பொதுக்குழு கூட்டும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு தரப்பட்டுள்ளது. இதுதான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.. கட்சி ஆரம்பித்து இத்தனை வருடங்கள் ஆகியும், அமமுக தலைவர் பதவி குறித்து இதுவரை தினகரன் பேசவில்லை..

திடீர் முடிவு: எத்தனையோ முறை பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் நடந்து முடிந்த நிலையில், அப்போதுகூட தலைவர் பதவி குறித்து பேசாத தினகரன், இப்போது திடீரென அந்த பேச்சை எடுத்துள்ளார். என்ன காரணம்? இந்த அமமுக செயற்குழு கூட்டம் கடந்த 7ம்தேதியே நடந்திருக்க வேண்டியது.. ஆனால், மூத்த தலைவர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண நிகழ்வுக்கு டிடிவி தினகரன் செல்லவேண்டியிருந்ததால், இந்த கூட்டம் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், அந்த கல்யாணத்தில், கொஞ்ச நேரம் கூட பிரியாமல், தினகரனுடனேயே ஒட்டிக்காணப்பட்டார் ஓபிஎஸ்..

தஞ்சாவூர்: திருமண நிகழ்வின்போதும்சரி, பந்தியில் சாப்பிடும்போதும்சரி, பக்கத்திலேயே ஒட்டிக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தார்.. இவர்கள் இருவரையும் பார்த்து, தென்மண்டலமே பூரித்தும், மகிழ்ந்தும் போனது.. பெருத்த நம்பிக்கை, டெல்டாவுக்கே வந்துவிட்டது. இதையடுத்து, இவர்களின் பயணம், விடாமல் தொடரும் என்றும் நம்பப்பட்டது. இப்போது விஷயம் என்னவென்றால், அமமுகவில் உள்ள தலைமை பொறுப்பு, ஓபிஎஸ்ஸூக்கு தரப்படுமா? என்பதுதான்.

அமமுகவை தொடங்கியபோதே, தினகரன், பொதுச்செயலாளர் பதவியையே ஏற்றார்.. கட்சியை துவங்கியபோதே, தலைமை போஸ்ட்டிங்கை சசிகலாவுக்காக ஒதுக்கி வைத்துவிட்டார் தினகரன்.. எப்போது அவர் ரிலீஸ் ஆகி வந்தாலும், தன் கட்சியை பொறுப்பெடுத்து நடத்துவார் என்றும் பெரிதும் நம்பி கொண்டிருந்தார்..அதற்காகவே சசிகலாவின் சென்னை வருகையை பிரம்மாண்டமாக நடத்திக்காட்டினார்..

திடீர் விரிசல்: ஆனால், அமமுக விஷயத்தில் சசிகலா, ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டவில்லை. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. அமமுகவுக்கு தலைமை பொறுப்பேற்றால், அதிமுகவை மறந்துவிட வேண்டியதுதான்.. மேலும், அதிமுக கேஸ், கோர்ட்டில் உள்ளதாலும், அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டுவருவதால், அமமுக தலைவர் பதவி விவகாரத்தில் ஆர்வம் காட்டவில்லை.. நாளடைவில், தினகரனுக்கும் – சசிகலாவுக்கும் விரிசலும் அதிகமாகிவிட்டது. சசிகலா பங்கேற்கும் நிகழ்ச்சியில் யாரும் பங்கேற்க கூடாது, சசிகலா படத்தை கூட்டங்களில் பயன்படுத்த கூடாது என்று தன்னுடைய நிர்வாகிகளுக்கு மறைமுக உத்தரவையே பிறப்பித்தாராம் தினகரன்.. அதன்படியே, கடந்த ஒரு வருட காலமாகவே, சசிகலா போட்டோ, சசிகலா பேனர், என எதுவுமே அமமுகவுக்குள் தென்படுவதில்லை.

அதிமுக தலைமை: ஆனால், ஓபிஎஸ் விவகாரம் அப்படியில்லை.. அதிமுக தலைமை பொறுப்பை ஏற்க முடியாத அளவுக்கு, எடப்பாடி பழனிசாமி வலுவாக உட்கார்ந்து விட்டார் என்றாலும், அதிமுகவை ஓபிஎஸ்ஸால் லேசில் உதறி தள்ள முடியாத சூழல் உள்ளது.. அதேசமயம், அமமுக தலைமை பொறுப்பை ஏற்பதன் மூலம், அதிமுகவை ஒருங்கிணைக்க முடியும் என்ற வாதத்தையும் கிளப்புகிறார்கள்.. ஒருவேளை தலைமை பொறுப்பை ஓபிஎஸ் ஏற்றால், அது தினகரனுக்கும் பெருத்த பலமாகவே இருக்கும்.. அத்துடன், விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், ஒரே குடையின்கீழ் தென்மண்டலத்தை கொண்டு, அதிமுக வாக்குகளையும் சேர்த்து அமமுகவால் பெற முடியும்.. காரணம், கடந்த முறை தினகரன் பிரித்த ஓட்டுக்கள் பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறந்துவிட முடியாது.

பாஜக குஷி: அந்த வகையில், ஓபிஎஸ் அமமுகவுக்குள் வருவது ஒருவகையில் நல்லதுதான்.. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் தென்மண்டலத்தில் ஒரு செக் வைத்தது போலவும் இருக்கும்.. மற்றொருபுறம், பாஜகவுக்கும் இது பெருமளவு நன்மை பயக்கும்.. ஆனால், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் தெரியவில்லை.. ஆனால், பழைய நண்பர்கள் மறுபடியும் சேர்ந்திருக்கிறார்கள்.. எப்படியும் சுபம் தரக்கூடிய முடிவைதான் எடுப்பார்கள் என தெரிகிறது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button