
குறுக்கே பாய்ந்த சு.வெங்கடேசன்.. உடனே இன்று வெளியான அறிவிப்பை கவனிச்சீங்களா? முதல்வருக்கு நன்றி!
சென்னை: தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிடியூட் நேற்று வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் நேற்று நாளிதழ்களில் வெளியான அறிவிப்பு ஒன்றில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு கௌரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான கல்வி தகுதியாக தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களில் முதுநிலை அல்லது எம்.பில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது இந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” என்று கோரிக்கை
இந்நிலையில், தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாளிதழ்களில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் பணி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு நிர்வாக காரணங்களாக மீளப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் வேலைவாய்ப்பு குறித்து நேற்று வெளியிடப்பட்ட விளம்பரம் மீளப்பெறுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.