
“கொலை செய்வேன்” திடீரென செல்போனில் வரும் சூதாட்டக்காரர்களின் மிரட்டல்.. புலம்பும் இந்திய வீரர்கள்!
சென்னை: சமூக வலைதளங்களில் இருந்து அதிகளவில் மிக சாதாரணமாக கொலை மிரட்டல் வருவதாக இந்திய பேட்மிண்டன் வீரர் சிரக் ஷெட்டி மற்றும் வீராங்கனை சிக்கி ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்து வீராங்கனை கிர்ஸ்டி கில்மோருக்கு கொலை மிரட்டல் மற்றும் பாலியல் மிரட்டல் வந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்திய வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் ஸ்காட்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை கிர்ஸ்டி கில்மோர், சூதாட்டக்காரர்களிடம் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் கொலை மற்றும் பாலியல் துன்புறுத்தல் மிரட்டல்கள் வருவதாக புகார் அளித்து இருந்தார். சர்வதேச பேட்மிண்டன் சங்க நிர்வாகிகள் கிறிஸ்டி-யின் புகாரால் அதிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து கிர்ஸ்டி கில்மோருக்கு ஆதரவாக கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஸ்காட்லாந்து போலீசாரிடமும் இந்த மிரட்டல் குறித்து கிறிஸ்டி புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து பேட்மிண்டன் வீராங்கனை கிர்ஸ்டி கில்மோர் பேசுகையில், எனக்கு மிரட்டல் வந்த அக்கவுண்டில் எந்த புகைப்படமோ, ஃபாலோயர்களோ இல்லை. என்னுடைய கணிப்பின்படி, அவர்கள் என் மேல் சூதாட்டத்தில் பணத்தை கட்டி இழந்தவர்கள். அதனால் அவர்களின் விரக்தியை மிரட்டல்கள் மூலமாக என்னிடம் காட்டுகிறார்கள். விளையாட்டை பார்த்து, புரிந்து கொண்ட யாரும் இப்படி செய்ய மாட்டார்கள்.
அவர்களை பொறுத்தவரை நான் ஒரு பந்தயக் குதிரை. அவர்களுக்கு சாதகமாக ஆட்டத்தின் முடிவு வராததால், என்னை நேரடியாக சமூக வலைதளம் மூலமாக மிரட்டுகிறார்கள். என் விளையாட்டையும், விளையாட்டு வீராங்கனையாகவும் என்னை விமர்சிக்கும் போது நிச்சயம், அவர்களின் வார்த்தைகள் என்னை பாதிக்கும். அந்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்வேன். ஆனால் என் விளையாட்டின் மீது பணம் கட்டி பாதிப்படைந்ததால், எனக்கு கொலை, பாலியல் மிரட்டல் விடுப்பது சரியல்ல என்று தெரிவித்தார்.