
சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா? அவர் எப்படி சனாதன ஸ்டார்? ஆளுநருக்கு எதிர்ப்பு
சென்னை: சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்த வடலூர் வள்ளலார் சனாதான தர்மத்தின் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழ்ந்து பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது
வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என புகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வள்ளலார் வைதீக மதநெறிகளை சாதி, சமய வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்து தனி சமய வழி உருவாக்கியவர். வைதீகத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என ஆளுநர் ரவி பேசியிருப்பது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வள்ளலார் யார்?: 1823-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். 1858-ம் ஆண்டு வரை சென்னையில் வளர்ந்தார். 1874-ம் ஆண்டு வள்ளலார் மறைவெய்தினார். வள்ளலார் தாம் வாழ்ந்த காலத்தில் சாதி, சமய ஒடுக்குமுறைகளுக்கு எதிரானரவாக இருந்தார். இதனால் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சித்தி வளாகம், சத்திய ஞான சபை ஆகியவற்றை உருவாக்கினார். வைதீக மதம், சனாதன தர்மம் ஆகியவற்றை மிக கடுமையாக நிராகரித்தவராக திகழ்ந்தவர் வள்ளலார். அத்துடன் சொற்பொழிவாளர், படைப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவராகவும் வாழ்ந்து புகழெய்தவர்.
தமிழ் மொழி பற்று: வள்ளலார் தமிழ் மொழியில் புலமை பெற்றவராக திகழ்ந்தார். திருமுறைகள் உள்ளிட்ட படைப்புகளை தமிழ் நல்லுலகத்துக்கு வழங்கியவர். தமிழில் புலமை பெற்றவராக மட்டுமே இல்லமால், தமிழ் உணர்வாளராகவும் இருந்தார். சமஸ்கிருத மொழியை சங்கரச்சாரியார், அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி என கூறியபோது, என் மொழி தமிழ் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி என வள்ளலார் கொடுத்த பதிலடி சரித்திரத்தின் பக்கங்களில் பேசிக் கொண்டிருக்கிறது