அரசியல்இந்திய செய்திகள்மற்றவை

சனாதனத்தின் ஒளிரும் சூரியனா வள்ளலார்? ஆளுநரின் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை! அமைச்சர் தங்கம்

சென்னை: சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும் சனாதன தர்மத்திற்கும் அடிப்படை வேற்றுமையை கூட ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்திருக்கவில்லையே என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் 10 ஆயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்திருக்கிறேன்.

வள்ளலாரின் நூல்களையும் படித்த போது மிகவும் பிரமிப்படைந்தேன். 200 ஆண்டுகளுக்கு முன் காரிருளை நீக்க வந்த ஜோதிதான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர்தான் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது.

அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதனத்தை எதிர்க்கிறார்கள். சனாதான தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். உங்களில் என்னையும் என்னில் உங்களையும் காண்பதுதான் சனாதன தர்மம். யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அதைத்தான் சனாதன தர்மம் போதிக்கிறது. இந்தியர்களை பற்றி தவறாக எழுதி வைத்திருப்பவர் கார்ல் மார்க்ஸ் என ஆளுநர் ரவி விமர்சித்தார். இவரது கருத்துக்கு சு வெங்கடேசன், வள்ளலார் அறக்கட்டளையினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். வள்ளுவரும் வள்ளலாரும் சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள் என மதுரை எம்பி சு. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்” புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார்.

தமிழ்ப் பண்பாடும் – விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை” ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை. இவ்வாறு தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button