
சேலத்தில் ‘டபுள் டக்கர்’ பேருந்து நிலையம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! லிஃப்ட் கூட இருக்கே
சேலம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சேலம் மாநகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சேலத்தில் ரூ.96.53 கோடியி

ல் ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சேலத்திற்கு வந்திருந்தார். நேற்று மாலை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இன்று காலை முதல் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை இன்று திறந்து வைத்தார். 1,713 சதுர அடி பரப்பில், 4 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சேலம் மாநகர பேருந்து நிலையத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 2019-20 ஆகிய ஆண்டுகளில் கொரோனா காரணமாக கட்டுமான பணிகள் தடைபட்டிருந்தன. தொடர்ச்சியாக அந்த பணிகள் நடைபெற்று தற்போது பணிகள் முடிந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்த ஈரடுக்கு பேருந்து நிலையமானது தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் மாநகர பேருந்து நிலையம் 2.76 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.96 கோடியில் மறு ஈரடுக்கு பேருந்து நிலையமாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 80 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகருக்குள் பயணம் செய்யும் பஸ்கள் தரைத்தளத்தில் நிறுத்தப்படும். சேலம் மாநகருக்கு வெளியே செல்லும் பஸ்கள் முதல் தளத்தில் இருந்து இயக்கப்படும்.