விளையாட்டு செய்திகள்

“தங்கம் வென்ற தங்க மகன்” 88.67மீ தூரம் ஈட்டியை எறிந்து அசத்தல்.. கத்தாரில் கலக்கிய நீரஜ் சோப்ரா!

தோஹா: கத்தாரில் நடைபெற்ற டையமண்ட் லீக் தொடரில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.                                                                                                                                        கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். 2022 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, நடப்பு ஆண்டிலும் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக் 88.63 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். கடந்த ஆண்டை விடவும் நீரஜ் சோப்ராவின் ஆற்றல் மேம்பட்டுள்ளது. வழக்கமாக முதல் வாய்ப்பில் அதிக தூரம் வீசிய பின், அடுத்தடுத்த வாய்ப்புகளில் குறைந்த தூரம் மட்டுமே ஈட்டியை எறிந்து வந்தார்.

ஆனால் நடப்பு ஆண்டில் முதல் வாய்ப்பில் 88.67 மீட்டர் தூரமும், இரண்டாம் வாய்ப்பில் 86.07 மீட்டர் தூரமும், மூன்றாம் வாய்ப்பில் 85.47 மீட்டர் தூரமும், கடைசி வாய்ப்பில் 84.37 மீட்டர் தூரமும் ஈட்டியை எறிந்தார். இந்த வெற்றி குறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில், நடப்பு ஆண்டுக்கான விளையாட்டு சீசனை சிறப்பாக தொடங்கியுள்ளேன்.
இன்றையப் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் கடினமான நாளாகவே அமைந்துள்ளது. என் ஆட்டத்தை பார்க்கும் போது என் மனதுக்கு நிறைவாக உள்ளது. சில நேரங்களில் 85 மீட்டர் தூரம் வீசினால் கூட தங்கம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நான் ஈட்டியை எறியும் தூரத்தில் சீராக இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்தடுத்து மூன்று சாம்பியன்ஷிப் தொடர்கள் வரவுள்ளது. முதல் தொடரிலேயே 8 புள்ளிகளை பெற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button