
திருச்சி கள்ளிக்குடி சந்தையில் விவசாயிகளின் விளைபொருள் நேரடி விற்பனை தொடங்கியது
திருச்சி: ரூ. 77 கோடியில் கட்டப்பட்டு 3 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த திருச்சி கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கனி விற்பனை வளாக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, விவசாயிகளின் விளை பொருள் நேரடி விற்பனை புதன்கிழமை முதல் தொடங்கியது.
திருச்சி மாநகரப் பகுதியில் இயங்கும் காந்தி சந்தையானது போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுப்பதாகக் கூறி திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ஒருங்கிணைந்த காய்கனி விற்பனை வளாகம் கட்ட 10 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டது. இங்கு காய்கனி சந்தை வளாகம் கட்ட கடந்த 2014ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினாா்.
பின்னா், ரூ. 77 கோடியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட வணிக வளாகத்தை கடந்த 2017 செப். மாதம் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தாா். ஆனால், ஒரு நாள்கூட இந்தச் சந்தை முழுமையாக இயங்காத வகையில் வியாபாரிகள் மத்தியில் கடும் எதிா்ப்புக் கிளம்பியது. கடைகளில் தங்களுக்கு போதிய இட வசதி இல்லை; நகரப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது; பொதுமக்கள் வருவதில் சிரமம் உள்ளது என பல்வேறு காரணங்களைக் கூறி கள்ளிக்குடிக்கு இடம் மாற காந்தி சந்தை வியாபாரிகள் மறுத்தனா்.
ஆட்சியா், அமைச்சா் தலைமையில் பலசுற்று பேச்சுவாா்த்தை நடத்தியும் பயனில்லை. இதையடுத்து பயன்படுத்தாமலேயே கிடப்பில் இருந்த கட்டடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலா் சண்முகம், வேளாண் வணிகத் துறை ஆணையா் எஸ்.ஜே. சிரு, ஆகியோா் கடந்த பிப்ரவரி மாதம் இந்தக் கட்டடத்தை பாா்வையிட்டு மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுரை வழங்கிச் சென்றனா்.
இதையடுத்து, இங்குள்ள 830 கடைகளில் 207 கடைகள், குளிா்ப்பதனக் கிடங்கு, தரம் பிரிக்கும் கூடம் ஆகியவை திருச்சியைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனம், உழவா் உற்பத்தியாளா்களுக்கு ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 623 கடைகளை தமிழகத்தில் பதிவு பெற்ற காய்கனிகள், மலா்கள் மற்றும் வேளாண் பொருள்கள் விற்பனை செய்யும் வணிகா்களுக்கு திறந்தமுறையில் டெண்டா் விட முடிவானது. இந்நிலையில், உழவா் உற்பத்தியாளா்கள் குழு, உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், உழவா் ஆா்வலா் குழுவினருக்கு ஒதுக்கப்பட்ட கடைகள் புதன்கிழமை திறக்கப்பட்டு விவசாயிகள் தங்களது விளை பொருள்களை நேரடியாக விற்பனை செய்தனா்.