
பாஜகவிற்கு எதிராக பாட்னாவில் நாளை கூடும் எதிர்கட்சி தலைவர்கள்..பீகார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக நாளை நடைபெற உள்ள எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பீகாருக்கு செல்கிறார். பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதலே மத்தியில் ஆட்சியில் உள்ளது பாஜக. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. கடந்த முறை பாஜகவின் வெற்றிக்கு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், சுகாதார வளாகம் போன்றவை கை கொடுத்தது.இந்த முறை வீடு வீடாக குழாய் அமைத்து ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாது அனைத்து மாநிலங்களிலும் கணிசமான இடங்களை வெல்ல பாஜக வியூகம் அமைத்து வருகிறது. அதே நேரத்தில் பாஜகவைத் தோற்கடிக்க வலுவான கூட்டணியை உருவாக்க எதிர்கட்சியினர் முயற்சி செய்துவருகின்றனர். இதற்கான முதல் முயற்சியாக பீகார் மாநிலம், பாட்னாவில் நாளை 23ஆம் தேதி எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.