
பிராய்லர் கோழிகள் கொழுக்மொழுக்காக ஹார்மோன் ஊசி போடுகிறார்களா? நீரிழிவை கட்டுப்படுத்துமாமே?
சென்னை: பிராய்லர் கோழியின் இறைச்சியை சாப்பிடலாமா வேண்டாமா என்பது இன்று பலரது கேள்வியாக உள்ளது. இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ப்ராய்லர் கோழி சாப்பிடலாமா வேண்டாமா? அதன் முட்டையை சாப்பிடலாமா? என்பதே தற்போது வரை தினசரி நான் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வியாக உள்ளது. பிராய்லர் கோழி குறித்த கட்டுக்கதைகளில் முக்கியமான ஒன்று இந்தக் கோழி ஆண் கோழியுடன் இணை சேராமலே வெறுமனே பெண் கோழிகளே வளர்க்கப்படுகின்றன.
அவற்றில் இருந்து கிடைக்கும் முட்டைகளும் மலட்டுத்தன்மை உடையவை. ஆகவே ப்ராய்லர் கோழி கறியையும் லேயர் கோழி முட்டையையும் தவிர்க்க வேண்டும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. முதலில் முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ப்ராய்லர் என்பது அதன் கறிக்காக வளர்க்கப்படும் கோழி இனம். லேயர் என்பது அதன் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழி இனம்.
இதன் இயற்கையே நன்றாக கொழு கொழுவென வளர்ந்து எடை போடுவது வளர்ப்பவர்க்கு குறைவான தீவனத்தில் நிறைவான கறி கொடுப்பது இதை FEED CONVERSION RATE என்பார்கள் ( தீவனம் கறியாக/ முட்டையாக மாறும் விகிதம்). எப்படி மனிதக் குழந்தைகளுக்கு உயிருக்கு ஊறு விளைவிக்கும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க தடுப்பூசிகள் செலுத்தபடுகின்றனவோ அது போலவே கோழிகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எப்படி மனிதர்களுக்கு சளி இருமல் நுரையீரல் தொற்று ஏற்பட்டால் ஆண்டிபயாடிக் மருந்து வழங்கப்படுகிறதோ அது போலவே கோழிகளுக்கும் தொற்று ஏற்படும் போது ஆண்டிபயாடிக்குகள் வழங்கப்படுகின்றன

. ஆனால் புரளி பரப்பப்படுவதைப் போல ஒவ்வொரு கோழியாகப் பிடித்து நன்றாக புஷ்டியாக மாற ஹார்மோன் ஊசிகள் போடப்படுவதில்லை. இதற்குக் காரணம் ஹார்மோன் ஊசிகள் விலை மதிப்பானவை. அவற்றை ஒவ்வொரு கோழிக்கும் போட்டு அவற்றை எடை கூட்டினால் மகசூலை விட முதலின் பொருளாதாரம் கூடிவிடும். எனவே ப்ராய்லர் கோழிப் பண்ணைகளில் ஹார்மோன் ஊசி போட்டு கோழியை பெரிதாக வளர்ப்பதில்லை. மாறாக கோழிகள் உடலுக்கு வேலை இன்றி நின்ற இடத்திலேயே இருந்து சத்து மிகுந்த தீவனங்களை உண்பதாலும் நோய் நொடியின்றி வளர்வதாலும் கறி நன்றாக வைக்கிறது. என்னை சந்திக்க வரும் பிசிஓடி எனும் சினைப்பை நீர்க்கட்டி நோயால் பாதிக்கப்பட்ட உடல் பருமனான மங்கைகளுக்கு அவர்கள் ப்ராய்லர் கோழிக் கறியை ஒரு வேளை உணவாக பேலியோ உணவு முறையில் பரிந்துரைத்து அவர்கள் உடல் எடை குறைந்து அதன் மூலம் பிசிஓடி கட்டுக்குள் வந்ததை உணர்ந்துள்ளேன்