Uncategorizedபொருளாதார செய்தி

“பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம்”.. ஐஎம்ஃஎப் அறிக்கை பற்றி.. நிதியமைச்சர் நிர்மலா தகவல்!

நியூயார்க்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்திருந்த நிலையில் இக்கருத்துக்களை அவர் கூறியுள்ளார். கடந்த வருடத்தின் வளர்ச்சி 8.7 ஐ விட இது குறைவு ஆகும்.  நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதார நெருக்கடியும் ஒன்றாக கலக்கும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பொருளாதாரம்

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் முன்னர் இந்தியா உலக பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்தது என்றும், தற்போது 5வது இடத்தில் இருக்கிறது என்றும் பாஜகவினர் பெருமை தெரிவித்து வருகின்றனர். இந்த வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் தலைமையே காரணம் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இவ்வாறு இருக்கையில், கடந்த 2011ம் ஆண்டிலேயே பொருளாதாரத்தில் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இருந்தது என்று உலக வங்கி கூறியிருந்ததை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பொருளாதார சரிவு

இவ்வாறு இருக்கையில், கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிப்புகளை எதிர்கொண்டது. சீனாவில் இன்றளவிலும் கூட கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாததால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்றி வருகிறது. இவ்வாறு இருக்கையில் நடப்பு நிதியாண்டில் (2022-2023) இந்தியாவின் பொருளாதாரம் 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்திருக்கிறது. கடந்த வருடத்தின் வளர்ச்சி 8.7 ஐ விட இது குறைவு ஆகும்.

கூடுதல் கவனம்

இது தற்போது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன. இந்நிலையில், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார் மத்திய நிதியமைச்சர். அப்போது புரூகிங்ஸ் நிறுவனத்துடனான கலந்துரையாடலில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.” என்றும், “பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்” எனவும் கூறியுள்ளார்.

கடினமான நடவடிக்கை

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா தொற்று ஏற்படுத்திய மந்த நிலையிலிருந்து இந்தியா வேகமாக மீண்டு வந்துள்ளது. இந்த முயற்சி தொடர்கிறது. எனவே இக்காலகட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கடினமானதாக இருக்கலாம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் ஆகியவை தயாராக உள்ளது.” என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2021ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்தியா உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக வளர்ச்சியடைந்துள்ளது என புளூம்பெர்க் நிறுவனம் தனது ஆய்வில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button