
மதுரை: மதுரையில் பார்சல் வாங்கிச் சென்ற உணவில் பிளேடு துண்டு இருந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார்
மதுரை சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கிச் சென்றார்.
இந்த நிலையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்த போது உணவில் பாதி உடைந்த நிலையில் ஒரு பிளேடு இருந்ததை கண்டார். மீண்டும் மீண்டும் அதை பார்த்து அது பிளேடு என்பதை உறுதி செய்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அந்த உணவுடன் அவர் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம் உணவில் பிளேடு துண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பணியாளர்களுக்கு மருத்துவச் சான்று இல்லாமல் தலையில் உறை அணியாமல் உணவுகளை சமைத்தது தெரியவந்தது. இதையடுத்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது. மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை சுட்டிக் காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வியாபாரம் நோக்கில் செயல்படும் சில ஹோட்டல்கள் இதுபோல் கவனக்குறைவாக இருப்பதால் இது போன்று எலி தலை, பிளேடு துண்டு, கரப்பான்பூச்சி, பூரான் உள்ளிட்டவை உணவில் கிடக்கின்றன. ஊருக்கே சோறு போடும் அன்னபூரணியாக மக்கள் பார்க்கும் ஹோட்டல்களில் இது போன்று சில ஆபத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு வேளை அந்த பிளேடு இருப்பது தெரியாமல் சாம்பாரை ஊற்றி பிசைந்த போது கையை அறுத்திருந்தால் என்ன செய்வது?