
`ரசாயன உரங்களின் பாதிப்புகளைத் தடுக்கும் மைக்ரோஜெல்கள்’ ஐ.ஐ.டி கண்டுப்பிடிப்பு… தீர்வு தருமா?
பூச்சிக்கொல்லிகள் மற்றும் வேளாண் ரசாயனங்களின் பயன்பாட்டால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் குறைக்க உதவும் ஸ்மார்ட் மக்கும் மைக்ரோஜெல்களை உருவாக்கியுள்ளனர் ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
இமாசலப் பிரதேசத்தின் மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி) ஆராய்ச்சியாளர்கள், விவசாய நடைமுறைகளை மேலும் நீடித்து நிலைக்கச் செய்யவும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் குறைக்கவும் உதவும் ஸ்மார்ட் மட்கும் மைக்ரோஜெல்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வு ‘கார்போஹைட்ரேட் பாலிமர்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மைக்ரோஜெல் உருவாக்கம் பற்றி பேசியுள்ள ஐ.ஐ.டி மண்டியின் வேதியியல் உதவிப் பேராசிரியர் கரிமா அகர்வால், “வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் போன்ற வற்றைத்தான் நவீன விவசாயம் பெரிதும் நம்பியுள்ளது. இதனால் விவசாயத்தில் ரசாயனங்கள் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன. இத்தகைய ரசாயனங்களை அடிக்கடி பயன்படுத்துவதால் நிலத்தடி நீர், மண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
நிலத்துக்கு இடும் ரசாயனங்கள் மழையில் அடித்து செல்லப்பட்டு அருகிலுள்ள ஏரி, ஆறு அல்லது ஓடை போன்ற நீர் ஆதாரங்களை அடைந்து அதையும் மாசுபடுத்துகிறது. பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களால் ஏற்படும் இது போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மட்கும் மைக்ரோஜெல்களைப் பயன்படுத்துவது தீர்வை கொடுக்கும். பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து விநியோகம் ஆகிய இரண்டுக்கும் இயற்கையான பாலிமர் அடிப்படையிலான மல்டி-ஃபங்க்ஸனல் ஸ்மார்ட் மைக்ரோஜெல்களை எங்கள் ஐ.ஐ.டி குழு உருவாக்கியுள்ளது. இந்த மைக்ரோஜெல்கள் மட்கும் தன்மை கொண்டது. இவை ரசாயன உரங்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்பதை உறுதி செய்கிறது” என்று விளக்கமளித்துள்ளார்.
மைக்ரோஜெல்களின் செயல்திறனைச் சோதிக்க, பயிர்களில் பூச்சிக்கொல்லியை ஏற்றி, அதன் வெளியீட்டை குழு ஆராய்ந்துள்ளது. இந்த மைக்ரோஜெல்கள் தாவரங்களால் ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதை மேம்படுத்த முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“ரசாயன உரங்களைப் பயிர்களுக்குக் கொடுத்து, அதனால் ஏற்படும் விளைவுகளைத் தீர்க்க, மேலும் இந்த மைக்ரோ ஜெல்களைப் பயன்படுத்துவது காதைச் சுற்றி வந்து தலையைத் தொடுவதற்கு சமம். நேரடியாக இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் மண்ணும், நீரும், காற்றும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாமல் இருக்கும். விளைச்சலும் இருக்கும். அதீத விளைச்சலுக்கு ஆசைப்பட்டு, பூச்சிக்கொல்லியைத் தெளித்து, பிறகு அதன் தீவிரத்தை குறைக்க இன்னொரு பொருளை வாங்கி மண்ணுக்குக் கொடுப்பது விவசாயிகளுக்கு மேலும் செலவை அதிகரிக்கும். இயற்கை விவசாயமே நிரந்தர தீர்வு என்பதை அறிவியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் உணர வேண்டும்” என்கிறார்கள் இயற்கை விவசாயச் செயற்பாட்டாளர்கள்.