
வெடித்துக் கிளம்பிய ரூ.136 கோடி ஊழல் புகார்! அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க முறைகேடு! பெரிய சிக்கல்
சென்னை: 2015-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் முந்தைய அதிமுக ஆட்சியில் 1,068 கூட்டுறவு சங்கங்களில் மட்டும் ரூ.136 கோடி அளவில் ஊழல் முறைகேடு நடந்து உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது கடந்த அதிமுக ஆட்சியில் 2015- 2016ஆம் ஆண்டு முதல் 2020-2021 வரை 1068 கூட்டுறவுச் சங்கங்களில் 136 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. 62 சதவீதம் கூட்டுறவுச் சங்கங்களில் சுமார் 1 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலும், 18 சதவீதம் கூட்டுறவுச் சங்கங்களில் சுமார் 10 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலும் ஊழல் நடைபெற்று உள்ளது. மேலும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 967 கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த கூட்டுறவு சங்க ஊழல் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
இதுதொடர்பான புகார், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சராக செல்லூர் ராஜூ செயல்பட்டு வந்தார். அவரது துறையில் ரூ.136 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.