
100 அடிக்கும் கீழே குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்..பருவமழை பொய்த்தால் நீர் திறப்பு நிறுத்தப்படுமா?
சேலம்: தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து இல்லாத நிலையில் அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் 100அடிக்கும் கீழே மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்துவருகிறது. நேற்று 99.64அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 98.98 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். கடந்த 2022ஆம் ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து, 249 நாட்களில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 205 டி.எம்.சி. தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 8.40 டி.எம்.சி. தண்ணீரும் திறக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி முதல், டெல்டா பாசனத்திற்காக தினமும் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. தற்போது அணை நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து தமிழக காவிரி பகுதியில் வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. கடந்த வாரம் வினாடிக்கு 1,805 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 454 கன அடியாக குறைந்துள்ளது.