சினிமா செய்திகள்

16 Years of Sivaji The Boss – டெம்ப்ளேட்டை உடைத்து கோலிவுட்டை அதிர வைத்த சிவாஜி தி பாஸ்

ரஜினி நடிப்பில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆன சிவாஜி படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ஜெண்டில்மேன் மூலம் அறிமுகமான ஷங்கர் சில படங்களிலேயே முன்னணி மற்றும் முக்கியமான இயக்குநர் என்ற பெயரை எடுத்துவிட்டார். அப்படிப்பட்ட ஷங்கர் அந்நியன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினியுடன் கைகோர்த்தார். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க ஸ்ரேயா ஹீரோயினாக நடிக்க சிவாஜி படம் உருவானது. ரஜினியுடன் முதல்முறையாக ஷங்கர் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் ரஜினி ரசிகர்களுக்கு ஏகப்பட்ட குஷி.

சிவாஜி: ஷங்கரின் படத்தில் எப்போதும் பிரமாண்டமும், சமூகம் சார்ந்த கருத்துக்களும் கலந்திருக்கும். எனவே சிவாஜி எந்த மாதிரி ஜானரில் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகுக்கும் இருந்தது. தனது வழக்கமான டெம்ப்ளேட்டில் ஊழல், லஞ்சம் என்ற ஜானரில் சிவாஜியை அவர் உருவாக்கியிருந்தாலும் மையக்கருவாக கல்வியை அவர் எடுத்துக்கொண்டதும், அதில் ரஜினி நடித்ததும் படத்துக்கான வேல்யூவை அதிகப்படுத்தியது.

பஞ்ச் டயலாக்குகள்: சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே பஞ்ச் டயலாக்குகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இப்போதுவரை இருக்கிறது. ஆனால் அவரது பஞ்ச் டயலாக்குகளின் ஸ்டைலை மாற்றியதில் சிவாஜிக்கு முக்கிய பங்கு உண்டு. வசனங்களை சுஜாதா எழுதினார். ஒரு வார்த்தையில் ஓராயிரம் முறை கூஸ்பம்ப்ஸ் ஏற்படும் வசனங்களை எழுதியிருந்தார் சுஜாதா. குறிப்பாக பேரை கேட்டா சும்மா அதிருதுல்ல என்ற டயலாக் இன்றுவரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதேபோல் பராசக்தி பட ஹீரோடா என ரஜினியை வைத்து ஷங்கர் பேச வைத்தது எல்லாம் வேறு ரகத்தில் இருந்தன.

டெம்ப்ளேட்டை உடைத்த ஷங்கர்: ரஜினிக்கு பஞ்ச் டயலாக்குகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல்தான் பாடல்களும். பொதுவாக ரஜினியின் ஓபனிங் பாடல்களில் இருக்கும் வரிகள் ஏதோ ஒன்றை பூடகமாக உணர்த்தி செல்லும். அப்படித்தான் சிவாஜி ஓபனிங் பாடலுக்கு முன்புவரை வைரமுத்துவோ, வாலியோ எழுதிக்கொண்டிருந்தனர். ஆனால் பல்லேலக்கா பாடலை நா. முத்துக்குமார் எழுதினார்.

ரஜினிக்கான பில்டப்புகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் கதைக்கு தேவையான வரிகளை ஓபனிங் பாடலில் முத்துக்குமார் சேர்த்திருந்தது கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியது. அதை அவர் எழுதினாலும் அதுவரை தனக்கென்று இருந்த ஓபனிங் பாடல் டெம்ப்ளேட்டை உடைக்க ஒத்துக்கொண்டதற்காகவே ரஜினிக்கு ஒரு சல்யூட் வைக்கலாம். நா. முத்துக்குமார் மட்டுமின்றி பா.விஜய், வைரமுத்து, வாலி ஆகியோரும் அந்தப் படத்தில் பாடல்கள் எழுதியதன் காரணமாக இன்றுவரை தி பெஸ்ட் ஆல்பமாக ஜொலிக்கிறது சிவாஜி பாடல்கள்.

ரஹ்மானின் செய்கை: ஷங்கர் படங்களுக்கு சும்மாவே உழைப்பை கொட்டி மெட்டு கட்டுவார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் முதல்முறையாக ரஜினியுடன் ஷங்கர் இணைந்திருந்ததால் வெறித்தனமாகவே உழைத்திருந்தார். இனி நான் போகப்போறது சிங்கப்பாதை என்று ரஜினி கூறும் இடத்தில் வரும் பின்னணி இசை, மொட்டை பாஸ் ரஜினி எண்ட்ரி ஆகும் இடத்தில் வரும் இசை என ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை மூலம் சிறப்பான செய்கையை சிவாஜிக்காக செய்திருந்தார். கே.வி.ஆனந்த் மேஜிக்: படத்துக்கு ஷங்கரின் மேக்கிங்,ரஜினியின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என பல பலங்கள் பொருந்தியிருந்தன. அந்த பலங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக கலை இயக்குநர் தோட்டா தரணியும், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த்தும் இருந்தனர். சஹானா பாடலுக்காக தோட்டா தரணி முழுக்க முழுக்க கண்ணாடிகளால் ஆன செட் ஒன்றை போட்டிருந்தது இன்றுவரை பலரையும் பிரமிக்க வைத்திருக்கிறது. அதேபோல் கே.வி.ஆனந்த்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு மேஜிக்கை நிகழ்த்திக்காட்டியது. அதிலும், சஹானா பாடலின் ஒரு இடத்தில் சின்ன கண்ணாடி குடுவைக்குள்ளிருந்து கேமரா பின்னால் வரும் ஷாட் யாராலும் யோசிக்க முடியாதது. அதை இப்போது பார்த்தாலும் பலரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்துதான் நிற்பார்கள்.

விமர்சனம்: படம் வெளியாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இப்போது ஒரு திரைப்படம் நூறு கோடி ரூபாய் வசூலிப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால் சிவாஜி வெளியான காலகட்டத்தில் நூறு கோடி வசூல் என்பது கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்க்கு சமம். அந்தவகையில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக நூறு கோடி ரூபாயை வசூலித்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது சிவாஜி.

இப்படி பல பெருமைகளை பெற்றாலும் அங்கவை, சங்கவை கதாபாத்திரத்தின் மூலம் விமர்சனத்தையும் சந்தித்தது. அந்தக் காட்சியின் மூலம் உருவ கேலியையும், நிற கேலியையும் ஷங்கர் ஊக்கப்படுத்துகிறார் என்ற விமர்சனத்தையும் பலர் முன்வைத்தனர். இப்படி படத்தில் சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் ரஜினிகாந்த்துக்கு வந்த கமர்ஷியல் படங்களிலேயே சிவாஜிக்கு முதல் மூன்று இடங்களில் ஒன்றை கொடுக்கலாம்

சமூகம் சார்ந்த கருத்து: ஏனெனில் ரஜினி அதுவரை சமூகம் சார்ந்த கருத்துக்கள் இருக்கும் படங்களில் அதிகம் நடிக்கமாட்டார். அவர் பக்கா கமர்ஷியல் ஹீரோ என்ற டெம்ப்ளேட் இருந்தது. ஆனால் இலவசமாக கல்லூரி கட்டுவது அதன் மூலம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது என்ற கான்செப்ட்டில் நடித்ததன் மூலம் அந்த டெம்ப்ளேட்டை உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டார். இப்படி டெம்ப்ளேட்டை உடைத்து கோலிவுட்டை அதிரவைத்த சிவாஜி வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button