சினிமா செய்திகள்

Happy Birthday Vijay – தடைகளை வென்று சரித்திரம் படைப்பதில் மாஸ்டர் – பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்

Happy Birthday Vijay (பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்) இந்திய சினிமாவின் புகழ் பெற்ற ஹீரோக்களில் ஒருவரான விஜய்யின் 49ஆவது பிறந்தநாள் இன்று.

விஜய் இந்தப் பெயரை கேட்டாலே பலரும் கொண்டாடி தீர்ப்பார்கள். தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் நுழைந்த அவர் திறமையின் துணையோடு இப்போது வசூல் சக்கரவர்த்தியாக கோலிவுட்டில் திகழ்ந்துவருகிறார். சினிமாவுக்குள் அவர் வந்தபோது விஜய் மீது தொடுக்கப்பட்ட விமர்சன அம்புகள் ஏராளம். எப்போதும் எதையும் அமைதியாக எதிர்கொள்ளும் விஜய் அதையும் அமைதியாக எதிர்கொண்டு இன்று எதிரிகளை ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறார்.

இளைய தளபதி: விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் துணை இருந்தார்தான். ஆனால் சினிமாவில் வெல்வதற்கும், தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கும் தந்தையின் துணை மட்டும் போதாது. தனக்குள்ளே ஒரு திறமை வேண்டும். ஆரம்பத்தில் தடுமாறிய விஜய் பூவே உனக்காக படத்தின் மூலம் ரேஸ் ட்ராக்குக்குள் வந்தார். அப்போதிருந்து அவர் முந்திய ஹீரோக்கள் ஏராளம், தாண்டிய தடைகள் ஏராளம். இதனால் இளைய தளபதி ஆனார்.

கமர்ஷியல் கிங் தளபதி: குடும்ப ரசிகர்களை மையமாக வைத்து ஓடிக்கொண்டிருந்த விஜய்க்கு திருமலை பெரும் திருப்புமுனை. அங்கிருந்து அவர் அடித்த கில்லி கமர்ஷியல் பாதையில் விஜய்யை ஆழமாக விதைத்தது. அதனைத் தொடர்ந்து திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என கமர்ஷியல் படங்களில் நடித்து தன்னை கமர்ஷியல் கிங்காக மாற்றிக்காட்டினார்.

ஒருகட்டத்தில் விஜய் தொட்டதெல்லாம் ஹிட்டாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தானா என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. ஆனாலும் எல்லோருக்கும் வரும் சறுக்கல் அவருக்கும் வந்தது. வரிசையாக அவரது படங்கள் அடிவாங்கின. இருப்பினும் மனம் தளராத விஜய் மீண்டும் காவலன் மூலம் கம்பேக் கொடுத்தார். அதுவரை பஞ்ச் டயலாக் பேசி பரபரக்க வைத்த விஜய் காவலனில் பக்குவமாக தோன்றினார். தொடர்ந்து அவர் நடித்த துப்பாக்கி, மெர்சல் உள்ளிட்ட படஙக்ள் மெகா ஹிட்டாகின.

என்ன காரணம்: இதற்கிடையே விஜய்யை தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிவிட வேண்டுமென்பதில் சந்திரசேகர் தெளிவாக இருந்தவர். அதனால்தான் அவரது ஒவ்வொரு மூவ்வும் விஜய்யை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாக இருந்தது. அதன் விளைவாக விஜய் ரசிகர் மன்றம் 2008ஆம் ஆண்டு இதே நாள் நற்பணி இயக்கமாக மாறியது. அதற்கென்று தனிக்கொடியும் உருவானது. ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாறியதை அடுத்து விஜய்யின் நடவடிக்கையில் நிறையவே மாற்றங்கள் இருந்தன. அந்த மாற்றங்கள்தான் அவரது படங்களுக்கு பிரச்னைகளை உருவாக்கவும் செய்தன.

உண்ணாவிரதம்: முதலில் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தவர் அந்த மேடையில் காட்டமாகவே பேசினார். முதன்முதலில் விஜய்யை சுற்றி எழுந்த சர்ச்சை அது. இருந்தாலும் அந்த உண்ணாவிரதத்திலும், பேச்சிலும் ஒரு நியாயமான கோபம் இருந்ததன் காரணமாக அந்த சர்ச்சை பெரிய பிரச்னையாக மாறாமல் அப்படியே அமுங்கிப்போனது.

அரசியல் எனும் கடல்: விஜய்யின் படங்களுக்கு பிரச்னைகள் பலமாக எழ ஆரம்பித்ததன் முதல் புள்ளி புதுக்கோட்டையில். விஜய் நற்பணி இயக்கம் விஜய் மக்கள் இயக்கமாக மாறியது.அப்போது பேசிய விஜய் அரசியல் எனும் கடலில் இறங்கனும்னா ஆழம் பார்க்கணும். அதற்கான முயற்சியில் இருக்கிறேன் என்றார். அதனையடுத்துதான் அரசியல்வாதிகளின் கண்கள் விஜய் மீது நிலைக்குத்தி நிற்க ஆரம்பித்தன. இதேபோன்ற கருத்தை புதுக்கோட்டையை தொடர்ந்து புதுச்சேரியிலும் பேசிவிட்டு ராகுல் காந்தியையும் சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button