
TNPL: ஏமாற்றமளித்த சாய் சுதர்சன்.. பவுலராக மாறிய ஷாரூக் கான்.. ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த திருச்சி!
திண்டுக்கல்: திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை அணி எளிதாக வென்று பலரையும் வியக்க வைத்துள்ளது. சாய் சுதர்சன் ஆட்டமிழந்த போது, தனியாளாக போராடி சுஜய் வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.
7வது டிஎன்பிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 12வது லீக் போட்டியில் திருச்சி அணியை எதிர்த்து கோவை அணி களமிறங்கியது. திருச்சி அணி ஆடியிருந்த 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்ததால், இன்றையப் போட்டியிலாவது வென்று முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற கோவை அணி கேப்டன் ஷாரூக் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்பின்னர் கேப்டன் கங்கா ஸ்ரீதர் – அக்ஷய் ஸ்ரீனிவாசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சித்தார்த் வீசிய 2வது ஓவரிலேயே அக்ஷய் டக் அவுட்டில் வெளியேற, தொடர்ந்து வந்த மணி பாரதி மற்றும் பெரைரோ ஆகியோரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் திருச்சி அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் கேப்டன் கங்கா ஸ்ரீதர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர் ஒருபுறம் விக்கெட்டை காப்பாற்றினாலும் தொடர்ந்து வந்த ஜமால் 11 ரன்களிலும், வினோத் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ராஜ்குமார் சிறிது நேரம் கம்பெனி கொடுக்க, கங்கா ஸ்ரீதர் அரைசதம் கடந்தார். ஆனால் 16வது ஓவரில் அவரும் 55 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் ராஜ்குமார் – ஆண்டனி தாஸ் கூட்டணி விரைந்து ரன்கள் சேர்த்தது. இதனால் திருச்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.
கோவை அணியின் சித்தார்த் 3 விக்கெட்டுகளையும், ஷாரூக் கான் 2 விக்கெட்டுகளையும்வீழ்த்தினர். 118 என்ற எளிய இலக்குடன் கோவை அணியின் சுஜய் – சுரேஷ் குமார் இணை களமிறங்கியது. இந்த கூட்டணி பவர் பிளே ஓவர்கள் நிதானமாக விளையாடியது. இருப்பினும் சுரேஷ் குமார் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, நம்பிக்கை நட்சத்திரமான சாய் சுதர்சன் களம் புகுந்தார். ஹாட்ரிக் அரைசதம் விளாசி இருந்த அவர், பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் தொடக்க வீரர் சுஜய் அரைசதம் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியாக கோவை அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய சுஜய் 59 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் மூலம் கோவை அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.