
இன்று திருச்சிக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. அங்கிருந்து திருவாரூர்! ஷெட்யூல் என்ன? முழு விவரம்
திருச்சி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று இரவு திருச்சி வருகிறார். அதன் பின்னர் சாலை மார்க்கமாக திருவாரூர் செல்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று இரவு விமானம் மூலம் திருச்சிக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், சாலை மார்க்கமாக திருவாரூருக்குச் செல்கிறார். அங்கே ஓய்வுக்குப் பிறகு நாளை மறுநாள் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிறகு, அன்று இரவு மன்னார்குடியில் இருந்து மன்னை விரைவு ரயில் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்
திருவாரூர் மாவட்டம், காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் தலைமையேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். அதேபோல, முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். திருவாரூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டம் மிகப் பிரமாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கருணாநிதியின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இந்த திறப்பு விழாவிற்கு முன்னதாக வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வருவதை முன்னிட்டு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுக்க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் திருவாரூர் செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல ஐ.ஜி, மாநகர காவல் ஆணையர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.