சேலம்

எடப்பாடி பழனிச்சாமி கோட்டையில் முதல்வர் ஸ்டாலின்..3 நாட்களுக்கு என்னென்ன திட்டங்கள்?

சேலம்: எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று செல்கிறார். அப்போது, சேலம் மாவட்டத்தில் முடிவற்ற அரசுத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கிறார். மேட்டூர் அணையில் திறந்து பாசனத்திற்கான நீரையும் திறந்து வைக்க இருக்கிறார். எதிர்கட்சித்தலைவர் சேலத்தில் முகாமிட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலினும் சேலம் செல்வது எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.சேலம் மாவட்டத்திற்கு மூன்று நாள் பயணமாக இன்று மாலை தனி விமானம் மூலம் செல்கிறார். இன்று மாலை 6 மணிக்கு சேலம் மாநகர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வர் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார். சேலம் கிழக்கு, சேலம் மத்திய மற்றும் சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட பிற மூத்த திமுக தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.நாளைய தினம் ஜூன் 11ஆம் தேதி காலை சேலம் மாநகர் அண்ணா பூங்கா அருகே சேலம் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முழு திரு உருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின், அண்ணா பூங்கா அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக துறை கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் 97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையம், வணிக வளாக கட்டிடம், பெரியார் பேரங்காடி, நேரு கலையரங்கம், வ.உ.சி பூ மார்க்கெட் உள்ளிட்ட கட்டிடங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.சேலம் நகர பேருந்து நிலையம் ‘முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நகர பேருந்து நிலையம்’ எனவும், நேரு கலையரங்கம் ‘முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 2023 நேரு கலையரங்கம்’ எனவும், போஸ் மைதானம் ‘முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 2023 போஸ் மைதானம்’ எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளன.இவற்றைத் தொடர்ந்து, சேலம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், 50 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரி, இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம் முதலிய முடிவற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். ஜூன் 12ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 90வது ஆண்டாக நீர் திறக்கப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து பாசன நீரைத் திறந்து வைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button