
ஓ.பன்னீர் செல்வத்தால் மறக்க முடியாத ஜூன் 23..அன்று இதே நாளில் நேர்ந்த அவமானம்..பிளாஷ் பேக்
சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த ஆண்டு இதே நாளில் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் மிகப்பெரிய அவமானத்தை சந்தித்தார். அவருக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் ஒன்று திரண்டு பேசினர். உச்சக்கட்டமாக சிலரோ தண்ணீர் பாட்டிலை வீசி ஓ.பன்னீர் செல்வத்தை அவமானப்படுத்தினர். அதிமுகவில் இருந்து ஒ.பன்னீர் செல்வத்தை நீக்கி ஓராண்டு ஆக உள்ள நிலையில் அன்று நிகழ்ந்த சம்பவங்களை சற்றே திரும்பி பார்க்கலாம்.
இரட்டை குழல் துப்பாக்கியாக வலம் வந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றைத்தலைமை விவகாரம் பிரித்து போட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி விட்டு அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர எடப்பாடி பழனிச்சாமி விரும்பினார் அதற்கு ஓ.பன்னீர் செல்வம் சம்மதிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்ய அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் 2022 ஜூன் 14 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பேசினர். அன்றைய தினம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான விதை தூவப்பட்டது. ஒற்றைத்தலைமை என்ற வார்த்தையை சொல்லி நெருப்பை பற்ற வைத்தவர் ஜெயக்குமார்.
முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். முன்னாஜ் அமைச்சர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நின்றனர். ஆள் ஆளுக்கு ஊடகங்களில் பேச அதிமுகவின் அதிகார சண்டை ஊடகங்களில் பேசு பொருளானது.
மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிகம் இருந்ததால், பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என பழனிச்சாமி தரப்பு தெரிவித்தது. இதற்கிடையே பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வு ஜூன் 22 ஆம் தேதி சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி வீட்டில் இரவு முழுவதும் விசாரித்து அதிகாலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில்,அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிருப்தி அடைந்தது. ஜூன் 23ஆம் தேதி அ.தி.மு.கவின் பொதுக் குழு நடந்த அரங்கில் பெரும்பான்மையான பொதுக் குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் இருந்தனர். இதனால் பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்தும், எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தும் எழுப்பப்பட்டன. பொதுக்குழு கூடிய சில நிமிடங்களில் ஆக்ரோஷமாக எழுந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஓ.பன்னீர் செல்வம் கொண்டு வந்த பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக தெரிவித்தார். அதோடு ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்தும் பேசினார். இதனால் ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணன் தம்பி சண்டை பேசி முடிக்கலாம் என்று திட்டமிட்டவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அதை தொடர்ந்து அவைத்தலைவராக தமிழ் மகன் ஹுசேன் பெயரை எடப்பபாடி பழனிசாமி முன்மொழிய பொதுக்குழுவால் அவைத்தலைவராக தமிழ் மகன் ஹுசேன் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பொதுக்குழு மேடையில் இருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என பகிரங்கமாக கூறி வெளியேறினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அதிமுக ஒருங்கிணைப்பாளராக அதுவரை இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மீது பாட்டிலை வீசினார். உச்சபட்ச அவமானத்தோடு கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர்.
ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதை தொடர்ந்து உச்ச நிதிமன்றம் என தொடர்ந்து சட்ட போராட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 28 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இருந்த போதும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், அதனை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு இன்றும் விசாரணையில் உள்ளது. மேல்முறையீட்டு வழக்கு ஒரு புறமிருக்க டிடிவி தினகரனுடன் கைக்கோர்த்துள்ள ஓ.பன்னீர் செல்வம் அவருடன் இணைந்து கட்சியை மீட்பேன் என தெரிவித்துள்ளார். அமமுக என்ற கட்சியை தொடங்கி தனி ஆவர்த்தனம் செய்து வரும் டிடிவி தினகரனுடன் இணைந்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு எந்த வித தொடர்பும் அற்று இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார் டெட்டர் பேடு பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறி வருகிறது. ஒராண்டு கடந்த நிலையில் இதே நாளில் அன்று நடந்த சம்பவங்களை அதிமுகவினர் நினைத்து பார்த்து வருகின்றனர். லோக்சபாவிற்கு முன் இருவரும் மீண்டும் ஒன்றிணைவார்களா என்பதுதான் சராசரி அதிமுக தொண்டனின் கேள்வியாக உள்ளது.