
குப்பை அள்ளும் வண்டியில் அம்மா உணவகத்திற்கு வந்த உணவுப் பொருட்கள்.. பொதுமக்கள் ஷாக்! அதிமுக ஆவேசம்!
திருச்சி : துறையூரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்கு நகராட்சி குப்பை வண்டியில் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்து அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் துறையூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. துறையூர் பகுதியைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் மூன்று வேளையும் பசியாறுவதற்காக அதிமுக ஆட்சியில் இந்த உணவகம் திறக்கப்பட்டது.
தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் இந்த அம்மா உணவகத்தில் பசியாறி வருகின்றனர். 12 பணியாளர்கள் சமையல் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்து வருகின்றனர். உணவு சமைப்பதற்காக துறையூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு இங்கு சமைத்து பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக துறையூர் அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரிசி மூட்டைகளை துறையூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வந்து அம்மா உணவகத்தில் இறக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி குப்பை அள்ளுவதற்கான வண்டியில் அரிசி மூட்டைகள் வந்து அம்மா உணவகத்தில் இறங்கியுள்ளன. அதனை கண்ட பேருந்துக்காக வெளியூர் செல்ல காத்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏழை, எளிய மக்கள் பசியாறும் உணவு தயாரிக்கப்படும் அரிசியை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் குப்பை வாங்க பயன்படுத்தும் வாகனத்தில் கொண்டு வந்து இறக்கியது பலரையும் முகம் சுளிக்கச் செய்தது.