
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: வரவேற்பும் ஏமாற்றமும்
சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 20 சதவீத கூடுதல் மானியம், முருங்கை, தென்னை, மல்லிகை சாகுபடிக்கு ஊக்குவிப்பு என தமிழ்நாட்டின் 2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை பல வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் ஏமாற்றமளிக்கும் அம்சங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவசாயிகள்.
தமிழ்நாட்டின் 2023-24ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தால் தாக்கல்செய்யப்பட்டது.
இந்த நிதி நிலை அறிக்கை குறித்து கலவையான கருத்துகளே தற்போது வெளியாகிவருகின்றன. இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்கிறது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
“இந்த நிதிநிலை அறிக்கையில் சிறு தானியங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அங்கக வேளாண்மைக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும் வரவேற்கத்தக்கது.
அதேபோல, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும் என அறிவித்திருப்பதும் நல்லது. மேலும், முருங்கை சாகுபடிக்கு ஊக்குவிப்பு, மதுரை மல்லிகையை சந்தைப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் ஆகியவையும் வரவேற்கத்தக்கவை. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை பெரிதும் ஏமாற்றமளிக்கிறது.
இந்த நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளில் நெல்லுக்கு ஆதார விலையாக 2,000 ரூபாயும் கரும்புக்கு 4,000 ரூபாயும் நிர்ணயிக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அதைப் பற்றி இதில் ஏதும் இல்லை. கடந்த ஆண்டைப் போலவே கூடுதல் ஊக்கத்தொகை தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கான இடுபொருள் விலை மிகக் கணிசமாக உயர்ந்துள்ளது. அதனை மனதில் கொண்டு ஆதார விலையை உயர்த்தியிருக்க வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. சண்முகம்.
அதேபோல, பயிர் காப்பீட்டு குறித்த முக்கியமான பிரச்சனை ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “தற்போது விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுதான் மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், பிரதான் மந்த்ரி பசல் பீமா யோஜனா என்ற திட்டம் வந்த பிறகு, இதில் தனியார் கம்பனிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் சொல்வதுதான் சட்டமாக இருக்கிறது. இந்த நிலையில், இந்தக் காப்பீட்டிற்கென கிட்டத்தட்ட 2,400 கோடியை மாநில அரசு செலுத்துகிறது. இது மிகப் பெரிய தொகை. ஆகவே, தமிழ்நாடு அரசே சொந்தமாக காப்பீட்டு நிறுவனத்தைத் துவங்க வேண்டும்” என்கிறார் சண்முகம்.
விவசாயத்தைப் பொறுத்தவரை இந்த அரசு சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது எனக் குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பி.ஆர். பாண்டியன்.
“கடந்த ஆண்டு கரும்புக்கு நிலுவைத் தொகை தருவதாக சொன்னார்கள். அதை இப்போதுவரை செய்யவில்லை. திருமண்ணங்குடியில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தும் என்றார்கள். ஆனால், தற்போது அரசின் உதவியுடன் தனியாருக்கு அந்த ஆலை கைமாறியுள்ளது. அவர்கள் விவசாயிகளை மிரட்டுகிறார்கள்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நாகை – திருச்சி விவசாய தொழிற்வடச் சாலை அறிவித்தார்கள். ஆனால், இதே பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கவும் ஓஎன்ஜிசிக்கும் அனுமதி கொடுக்கிறார்கள். இயற்கை விவசாயத்திற்கு என நம்மாழ்வார் விருதை அறிவிக்கிறார்கள். அதே நேரம் செறிவூட்டப்பட்ட அரிசியையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவான அரசு என சொல்லிக்கொண்டாலும் செயல்பாட்டில், விவசாயிகளுக்கு எதிரான அரசாகத்தான் இது இருக்கிறது. இது ஒரு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்” என்கிறார் பி.ஆர். பாண்டியன்.
தமிழ்நாடு அரசின் கவனம் வேறு சில முக்கியமான விஷயங்களின் மீதும் படவில்லை என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த விவசாயியான அழகர் ராஜா.
“தமிழ்நாட்டில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற ஒரு கட்டமைப்பு உண்டு. இந்தக் கட்டமைப்பு 2012ல் துவங்கப்பட்டது. இது கிராமங்களில் விவசாயிகள் இணைந்து உருவாக்கும் ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு இடுபொருள் வாங்கிக் கொடுப்பது, விளைபொருளை விற்றுத்தருவது என செயல்படும்.
இந்த நிறுவனத்தைத் துவங்க நாம் எவ்வளவு முதலீடு செய்கிறோமோ, அதே அளவு முதலீட்டை (equity grant) மத்திய அரசும் செய்யும். ஆனால், இதையெல்லாம் 2019க்குப் பிறகு நிறுத்திவிட்டார்கள். இப்போது மாநில அரசு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தின் இட வாடகை, சிஇஓ சம்பளத்தைத் தருகிறார்கள். அது உதவிகரமாக இருக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால், அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நிலைமை சிக்கலாகிவிடுகிறது. இதற்குப் பிறகு நிறுவனத்தை நடத்த முடிவதில்லை. அதற்கு இந்த நிதி நிலை அறிக்கையில் ஏதாவது அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். எந்த அறிவிப்பும் அது குறித்து வராதது ஏமாற்றமளிக்கிறது. ஒரு பத்து லட்சமாவது ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும்.” என்கிறார் அழகர்ராஜ்.
இவர் 518 விவசாயிகளை இணைத்து, ஆரூரான் உற்பத்தியாளர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து பெரிதாகப் பேசாததும் ஏமாற்றமளிப்பதாக அவர் சொல்கிறார்.
பயிர் காப்பீட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை மகிழ்ச்சியளித்தாலும் முன்பைப்போல அரசே இதனை நடத்த வேண்டும் என்கிறார் அழகர் ராஜா. “தனியார் நிறுவனங்கள் நடத்தினால், சேதம் ஏற்படும்போது சில கிராமங்களுக்கு இழப்பீடு வழங்க மறுத்துவிடுகிறார்கள்” என்கிறார் அவர்.