
தவறிய அரசு” – விவசாயிகள் வழக்கில் நீதிபதிகள் சொன்னது என்ன?
“காலம் கடந்து ஆலைகளுக்கு செல்லும் விவசாய சாகுபடிகள் உற்பத்திக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் விவசாயிகளின் பொருட்களுக்குரிய விலையை வழங்காமல் காலம் கடத்தப்படுவது மட்டும் மாறவில்லை,” என இன்றும் வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
அதை உறுதிப்படுத்துவது போல் கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் சாகுபடிக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை கிடைக்கப்பெறாமல் சுமார் 14,000 கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர். நீதிமன்ற வாசலை அடைந்த இந்த விவசாயிகளின் வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் சமீபத்தில் அதன் தீர்ப்பை அளித்துள்ளது.
திருஆரூரான் சர்க்கரை ஆலை தஞ்சாவூர் மாவட்டத்திலும் கடலூர் மாவட்டத்திலும் உற்பத்தி பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளது. அப்பகுதியில் விளைவிக்கப்படும் கரும்புகள் இந்த ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன.
2013 முதல் 2017 வரை விவசாயிகள் வழங்கிய கரும்புகளுக்கான நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த 2018-ல் ஆலை தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது. அன்று முதல் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வேண்டி விவசாயிகள் போராடி வருவதாக கூறுகிறார் விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு.
இது தொடர்பாக அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொதுநல மனுவில், தஞ்சாவூரிலும் கடலூரிலும் செயல்பட்டு வந்த திருஆரூரான் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய 157 கோடி ரூபாய் நிலுவை தொகையை தர உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது
கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 1966-ன் படி, கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்புகளை சர்க்கரை உற்பத்திக்காக வாங்கும்போது வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச விலை என மத்திய அரசு நிர்ணயித்த விலைதான் `நியாய ஊதிய விலை` (Fair and Remunerative Price, FRP). அடுத்ததாக மாநில அரசு நிர்ணயிக்aகும் குறைந்தபட்ச விலை `மாநில ஆலோசனை விலை` (State Advised Price, SAP).
ஓவ்வொரு மாநிலத்தின் காலநிலை, போக்குவரத்து செலவு முதலிய காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த SAP நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், FRP மற்றும் SAP என இரண்டையும் சேர்த்து 14,000 விவசாயிகளுக்கு இரண்டு திருஆரூரான் ஆலைகளில் இருந்தும் 157.51 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் சம்மந்தப்பட்ட ஆலையிடம் இருந்து முறையே ரூ.4.45 கோடி மற்றும் ரூ.12.72 கோடி சேகரிக்கப்பட்டு மொத்தம் 4,323 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில், பதிலளித்த சர்க்கரை ஆலை நிர்வாகம், FRP-ல் கூறப்பட்டிருக்கும் 78 கோடி ரூபாயில், 45.02 கோடி ரூபாயை வழங்க முன்னரே ஒப்புக்கொண்டதாகவும், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (National Company Law Tribunal, NCLT) முன்னிலையில் அதற்கு விவசாயிகள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டதாகவும் தெரிவித்தது.
கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் 1966-ன் படி, விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை வாங்கிய 14 நாட்களுக்குள் அதற்கான விலையை வழங்கவேண்டும். அப்படி வழங்காத பட்சத்தில் அந்த தொகையுடன் சேர்த்து ஆண்டுக்கு 15 சதவீதம் வட்டியுடன் நிலுவைத்தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
இதை விவசாயிகள் தரப்பு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றது.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, 14,000 விவசாயிகளில் வெறும் 10 சதவீதத்தினர்தான் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
“FRP என்பது மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலைதானே தவிர நியாயமான சந்தை விலை கிடையாது. மாநில அரசின் SAP நியாயமாக வழங்கப்பட்டால் தான் சிறு, குறு விவசாயிகள் பிழைக்க முடியும். தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதியத்தை பெற விவசாயிகள் கைகட்டி நீதிமன்ற வாசலை நாடியிருப்பது துரதிருஷ்டவசமானது,” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் சட்டத்தில் கூறப்பட்டிருப்பது போல் முறையாக தொழிற்சாலைக்கு விவசாயிகள் சாகுபடிகளை வழங்குவதை உறுதிபடுத்தும் மாநில அரசு, அதே சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊதியத்திற்கான நேரம் தவறாமையை உறுதிப்படுத்தவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
“இது மாநில அரசு விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்று தர வேண்டிய தன் கடமையிலிருந்து தவறிவிட்டது என்பதையே காட்டுகிறது,” என்றும் நீதிபதிகள் கூறினர்.
“விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய FRP தொகையான ரூ. 78.48 கோடியில் NCLT முன்னிலையில் செலுத்தப்பட்ட ரூ.45.02 நீங்கலாக, மீதமுள்ள ரூ.33.46 கோடியை மொத்தமாக இன்னும் மூன்று மாதங்களுக்குள் சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும். இந்த நிலுவைத்தொகை விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வழங்கப்படுவதை மாநில நிர்வாகம் உறுதிபடுத்தலாம்,” என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“தீர்ப்பு பெறப்பட்டதில் இருந்து ஒரு வார காலத்திற்குள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்களிடம் மீதம் உள்ள ரூ.7.13 கோடியை NCLT திட்டத்தின்படி உரிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்,” என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“வட்டியுடன் திரும்பப்பெறுவோம்”
பிபிசி தமிழிடம் பேசிய அய்யாக்கண்ணு கூறும்போது, “நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். ஆனால் எங்களுக்கு முறைப்படி வழங்கப்பட வேண்டியது 10 ஆண்டுகளுக்கான வட்டியுடன் சேர்த்து மொத்தம் 157 கோடி. இது எங்களுக்கு வழங்கப்படும் வரை சட்டப்போராட்டத்தை தொடருவோம். அதற்காக மற்றுமொரு வழக்கையோ மேல் முறையீட்டையோ செய்வோம்,” என்று தெரிவித்தார்.