
தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பமா? வாய்ப்பே இல்லை ராஜா.. நேரடியாக பதில் சொன்ன சேவாக்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்தர் சேவாக் விளக்கம் அளித்துள்ளார.
இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழு தலைவராக சேத்தன் சர்மா செயல்பட்டு வந்தார். ஆனால் ஜீ தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய சேத்தன் சர்மா, தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தார். பிப்ரவரி மாதத்தில் சேத்தன் சர்மா ராஜினாமா செய்த நிலையில், அவரது இடம் இன்று வரை நிரப்பப்படாமலேயே உள்ளது. இதனால் தேர்வுக் குழு இடைக்கால தலைவராக ஷிவ் சுந்தர் தாஸ் செயல்பட்டு வருகிறார்.
இவரது தலைமையில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களுக்கும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வுக் குழு தலைவருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதன்பின்னர் தேர்வுக் குழு தலைவராக செயல்பட பிசிசிஐ தரப்பில் வீரேந்தர் சேவாக்கிடம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு சேவாக் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அப்போது சேவாக்கை தவிர்த்துவிட்டு, அந்த பொறுப்புக்கு அனில் கும்ப்ளேவை பிசிசிஐ நியமனம் செய்தது. அதன்பின்னர் பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி, என்சிஏ தலைவராக விவிஎஸ் லக்ஷ்மண், இந்திய அணி பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால் இந்திய அணிக்காக ஆடிய சேவாக்கிற்கு மட்டும் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு சேவாக் விண்ணப்பிக்கப் போவதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் குறித்து வீரேந்தர் சேவாக்கிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் தேர்வுக் குழு தலைவராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் தேர்வுக் குழுவினருக்கான ஊதியம் குறைவாக இருப்பதால், அந்தப் பொறுப்புக்கு வருவதாக இந்திய ஜாம்பவான்கள் தயங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.