
பக்ரீத் பண்டிகை! ஆடு விற்பனை அமோகம்! மணப்பாறை சந்தையில் ரூ.5 கோடி வரை நடந்த வியாபாரம்!
திருச்சி: இஸ்லாமியர்களின் பெருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை சந்தைகளில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கால்நடைக்கு சந்தைக்கு பெயர் போன மணப்பாறை சந்தையில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வழக்கத்தை விட இந்த வாரம் சந்தைக்கு அதிகளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
உயிருடன் எடை ரூ.400 முதல் ரூ.450 வரையும் கறிக்கணக்கில் எடுத்துக்கொண்டால் ரூ.900 முதல் ரூ.1200 வரையும் மதிப்பிடப்பட்டு கிடா ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மணப்பாறை சந்தையை போலவே அய்யலூர் சந்தை, சமயபுரம் சந்தை, என தமிழகத்தின் பல சந்தைகளில் ஆடு விற்பனை சக்கை போடு போட்டு வருகின்றன. ஆடுகளில் உடல்வாகு, எடை, உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அதற்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.
ஆடுகளின் விலை சற்று அதிகம் என்றாலும் கூட பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால், வேறு வழியின்றி தாங்கள் வாங்கிச் செல்வதாக கூறுவதை கேட்க முடிந்தது. இதனிடையே ஆட்டை முன் கூட்டியே வாங்கினால் இந்தளவுக்கு விலை இருந்திருக்காது என்பது வாஸ்தவம் தான் என்றும் ஆனால் ஆட்டை பராமரிக்கும் பணிக்கு ஆட்கள் இல்லாததால் கடைசி நேரத்தில் விலையை அதிகம் கொடுத்து வாங்கிச் செல்வதாக தெரிவித்தார்கள். இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் நபி இறைவனுக்காக ஆட்டை பலிகொடுத்ததன் தொடர்ச்சியாக அந்த நடைமுறையை காலம் காலமாக இஸ்லாமியர்கள் பின்பற்றி வருகிறார்கள். பக்ரீத் பண்டிகை மற்றும் அதற்கு அடுத்த நாள் என இரண்டு நாட்களும் ஆடுகள் அறுக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் இறைச்சியை உற்றார் உறவினர் ஏழை எளியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும்.