
பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து.. சேலத்தில் பெண் உள்பட 3 பேர் உடல் சிதறி பலி.. அரசு நிவாரணம்
சேலம்: சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பெண் உள்பட 3 பேர் உடல் சிதறி பலியான நிலையில் 6 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் தான் அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எஸ் கொல்லப்பட்டி கிராமத்தில் தனியாசொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்த பட்டாசு குடோனில் பணியாளர்கள் தினமும் வேலை செய்து வந்தனர். இன்று மாலையில் 12 பேர் பட்டாசு குடோனில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இந்த வேளையில் பட்டாசு குடோனில் இன்று திடீரென்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பதறியடித்து கொண்டு குடோனுக்கு ஓடிவந்தனர். அப்போது குடோன் தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு குடோனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மேலும் 6 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள். அவர்கள் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு கலெக்டர் கார்மேகம் மற்றும் சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உள்ளிட்டவர்களும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வெடிவிபத்தில் இறந்தவர்களில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில் எஸ் கொல்லபட்டியை சேர்ந்த சென்றாயன் மகன் நடேசன் (வயது 50), கந்தசாமி மகன் சதீஷ் குமார் (35) ஆகியோர் இறந்தது தெரியவந்தது. இருப்பினும் இறந்த மற்றொரு பெண்ணின் பெயர் குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை.