
புகார் கொடுக்க வந்த இளம்பெண்.. வாட்ஸ்அப் எண் வாங்கி ஆபாச மெசேஜ் செய்த இன்ஸ்பெக்டர்..திருச்சியில் ஷாக்
திருச்சி: செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி எஸ்.ஐ பாலியல் தொல்லை கொடுத்ததாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி பேராசிரியை அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், திருச்சியில் தங்கி முதுகலை கணிதவியல் பட்டம் படித்து வருவதாகவும், தனியார் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், மார்ச் மாதம் உறவினர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அப்பெண் சென்று உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புகாருக்கு உள்ளான நபரை கைது செய்தனர். இந்த புகார் தொடர்பாக காவல் ஆணையரகம் அலுவலகம் சென்றுள்ளார். அப்போது மாநகர காவல் ஆய்வாளர் ஒருவர் உதவுவது போல அந்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தாராம். அதன்பிறகு செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டு அவருக்கு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப தொடங்கியிருக்கிறார். அதிலும் ஆபாச மெசேஜ்களாக அனுப்பி பாலியல் உறவுக்கும் அழைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இளம்பெண் மறுத்துள்ளார்.
இருந்தாலும் தொடர்ந்து முகம் சுளிக்கும் வகையிலான ஆபாச மெசேஜ்களை அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். இது குறித்து துணை ஆணையரை சந்தித்து புகார் கொடுக்க சென்ற போது காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் மற்றும் சில காவலர்கள் அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்களாம். அது மட்டும் இன்றி செல்போனை பிடுங்கி , காவல் ஆய்வாளர் அனுப்பிய ஆபாச படங்கள் மற்றும் மெசேஜ்களை அழித்து விட்டார்களாம்.