கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் திடுக் மாற்றம்.. பெற்றோர் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் சந்தேக மரணம் என இருந்ததை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி மாற்றி பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்ததாக தெரிகிறது.

மாணவியின் தந்தை தாக்கல் செய்த வழக்கு அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி மாணவியின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்த போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், மாணவி மரண வழக்கின் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், மாணவி பயன்படுத்திய செல்ஃபோனை ஆய்வு செய்த தடயவியல் துறையின் அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். வழக்கின் இறுதி அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, மாணவி மரண குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற கோரிய தாயார் மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பதில் மனு தாக்கல் செய்யும் வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற மாணவியின் பெற்றோர் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி வழக்குகளின் விசாரணையை மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த நிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபர் கீர்த்திகா, இரண்டாவது நபர் ஹரிப்பிரியா ஆகியோரை வழக்கிலிருந்து நீக்கியது. இதுகுறித்து ஆட்சேபம் இருந்தால் வரும் 5-ஆம் தேதிக்குள் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button