ஆந்திரா

நாங்க சீரியசாவே கேசிஆர் கட்சியுடன் சண்டை செய்யுறவங்க.. நம்புங்கப்பா…சொல்வது பாஜக ஜேபி நட்டா

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சியுடன் பாஜகவுக்கு எந்த உறவும் இல்லை; ஆளும் பிஆர்எஸ் கட்சியை பாஜக கடுமையாக எதிர்க்கிறது என அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸைத்தான் பிரதான எதிர்க்கட்சியாக எதிர்கொள்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத எதிர்ககட்சிகளை ஒருங்கிணைக்கவே முதல்வர் கேசிஆர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது இந்த முயற்சி கை கூடவில்லை.

இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை பாட்னாவில் அண்மையில் கூட்டினார். இந்தக் கூட்டத்துக்கு பிஆர்எஸ் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான கேசிஆர் அழைக்கப்படவில்லை. கேசிஆர் கட்சியை, பாஜகவின் பி டீம் என்றுதான் காங்கிரஸ் உள்ளிட்ட எதீர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

நட்டா விளக்கம்: இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா, தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் எந்த உறவுமே இல்லை. நாங்கள் ஆளும் பிஆர்எஸ் கட்சி அரசாங்கத்தை எதிர்த்து சீரியசாகவே போராடுகிறோம். சட்டசபை தேர்தலிலும் பிஆர்எஸ் கட்சிக்கு எதிராக உறுதியுடன் போராடுவோம் என்றார்.

நட்டா எச்சரிக்கை: முன்னதாக தெலுங்கானா பாஜக தலைவர்களுடன் ஜேபி நட்டா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, தெலுங்கானா பாஜகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button