
காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்.. பஞ்சாப் பிரசார கூட்டத்தில் மோடி கிண்டல்
ஜலந்தர்: காங்கிரஸ் என்பது ஒரு கடந்த கால விஷயம். அதை பஞ்சாப் மக்கள் நம்பக்கூடாது. அந்த கட்சி, ஒரு மூழ்கும் கப்பலாக உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 4-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள ஜலந்தரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசியதாவது: இந்த நாட்டிற்கே பஞ்சாப் உணவளிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பஞ்சாப் எப்போதும் முன்னணியில் நிற்கும். துறவிகள், கதாநாயகர்கள், வீரர்கள் மற்றும் தியாகத்திற்கான தாய் மண்ணாக பஞ்சாப் திகழ்கிறது.
பஞ்சாப் வளர்ச்சிக்காக முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இரவு பகல் பாராது அயராது உழைக்கிறார். மாநிலத்தின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வரும் காலங்களிலும் சிறந்த திட்டங்கள் பஞ்சாபில் கொண்டு வரப்படும். பஞ்சாப் இளைஞர்கள் மீது போதை மருந்து குற்றச்சாட்டை சுமத்தி, சிலர் அரசியலை தரம் தாழ்த்தி வருகிறார்கள். அந்த கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேர்தலில் பதிலடி தாருங்கள். காங்கிரஸ் என்பது ஒரு கடந்த கால விஷயம். அதை பஞ்சாப் மக்கள் நம்பக்கூடாது. அந்த கட்சி, ஒரு மூழ்கும் கப்பலாக உள்ளது. அதில் யாரும் பயணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், கரைக்கு போய்ச்சேர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு என்று கொள்கை கிடையாது. ஆட்சிக்காக மனம் போன போக்கில் கொள்கையை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும். காங்கிரஸால் பஞ்சாபில் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு மோடி கூறினார்.