
பஞ்சாப் விமானம் திடீரென பாகிஸ்தானில் நுழைந்ததால் பரபரப்பு.. இரவு நேரத்தில் அலறிய பயணிகள்! என்னாச்சு
டெல்லி: பஞ்சாப்பில் இருந்து கிளம்பிய இந்திய விமானம் ஒன்று திடீரென பாகிஸ்தானுக்குள் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த காலங்களில் எந்தவொரு சூழலிலும் நல்ல உறவு இருந்தது இல்லை. போர், மோதல் என எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வந்து இருக்கிறது.
இதனால் எல்லையில் அமைதியான சூழல் இருந்ததே இல்லை. உலகிலேயே மிகவும் கண்காணிக்கப்படும் எல்லையாக இந்தியப் பாகிஸ்தான் எல்லை இருக்கிறது என்றால் அங்கே நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பாகிஸ்தான்: மேலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்ல கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். இதற்கிடையே பஞ்சாபில் இருந்து குஜராத் சென்ற விமானம் திடீரென பாகிஸ்தானுக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் அமிர்தசரஸில் இருந்து அகமதாபாத் செல்லும் இண்டிகோ விமானம் நேற்று முன்தினம் இரவு திடீரென பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா பகுதியில் நுழைந்துள்ளது.
454 நாட்ஸ் வேகத்தில் சென்ற அந்த விமானம், இரவு 7:30 மணியளவில் லாகூரின் வடக்கே சென்றுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் அங்கேயே இருந்த நிலையில், இரவு 8:01 மணிக்கு அந்த விமானம் பத்திரமாக இந்தியா திரும்பியுள்ளது. இப்படியொரு சம்பவம் நடந்ததை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு தரப்பும் உறுதி செய்துள்ளது.
என்ன நடந்தது: இது குறித்து இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மோசமான வானிலை காரணமாக இண்டிகோ விமானம் நேற்று முன்தினம் (ஜூன் 10) பாகிஸ்தான் வான்வெளியில் சிறிது நேரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த விமானம் அமிர்தசரஸில் இருந்து அகமதாபாத்துக்கு செல்லவிருந்தது. பாகிஸ்தானுக்கு அந்த விமானம் சென்றாலும் மீண்டும் அது பத்திரமாக அகமதாபாத்தில் தரையிறங்கியது” என்றது. இண்டிகோ விமானம் 6E-645 மோசமான வானிலை காரணமாக அட்டாரி வழியாகப் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்துள்ளது.. பாகிஸ்தான் வழியில் நுழைந்த உடன் இது குறித்து உடனடியாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மொபைல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விமானத்தில் இருந்த குழுவுக்கும் என்ன செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பத்திரமாக வந்த விமானம்: பின்னர் அது மீண்டும் பத்திரமாக இந்திய வான்வழியில் நுழைந்து குஜராத்தில் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளது. அதேநேரம் இது ஒன்றும் அசாதாரண விஷயமில்லை என்றும் மோசமான வானிலை காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவே செய்யும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், விமானம் திடீரென பாகிஸ்தானுக்குள் நுழைந்ததால் பயணிகள் முதலில் அச்சமடைந்தனர். இருப்பினும், விமான குழு பயணிகளிடம் இது குறித்து உடனுக்கு உடன் தகவல்களைப் பகிர்ந்து வந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
சனிக்கிழமை மாலை இந்தியப் பாகிஸ்தான் எல்லையில் மோசமான வானிலை இருந்தது. குறிப்பாகப் பாகிஸ்தானில் சக்திவாய்ந்த காற்றுடன் கூடிய மழை இருந்தது. இதனால் அங்கு விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், இந்த புயல் காரணமாகப் பாகிஸ்தானில் பல்வேறு மாவட்டங்களில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர். அந்தளவுக்கு ஒரு மோசமான வானிலையே அங்கு நிலவியது.