
பாஜகவை வீழ்த்த வியூகம்.. 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நிறைவு.. ஆலோசிக்கப்பட்டது என்ன?
பாட்னா: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பீகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என வியூகம் வகுத்து வருகிறது. தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்கி முழு வீச்சில் அக்கட்சி செயல்பட தொடங்கியுள்ளது. பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டியுள்ள எதிர்க்கட்சிகள், ஓரணியில் திரண்டால் இது சாத்தியப்படும் என பேசி வருகின்றன.
இதற்கான முயற்சியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக நிதிஷ்குமார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், லோக்சபா தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
மதியம் 12.00 மணியளவில் கூட்டம் தொடங்கியது. நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, முதல்வர் மு.க ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் தேசிய அளவில் உன்னிப்பாக கவனம் பெற்றது. 12 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜகவை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 16 கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆம் ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த்மான், சஞ்செய் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.