
பாலி தீவில் கடலில் மூழ்கி சேலம் புதுமணத் தம்பதி பரிதாப பலி.. ஹனிமூன் சென்ற போது விபரீதம்
சேலம்: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு தேனிலவுக்கு சென்ற சேலத்தை சேர்ந்த புதுமண தம்பதி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணமாகி ஒரே வாரத்தில் புதுமணத்தம்பதியினர் விபத்தில் மரணமடைந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஹனிமூன் பயணம் சந்தோஷத்தை கொடுப்பதற்கு பதிலாக சிலருக்கு எமனாகி விடுகிறது. போட்டோ சூட் எடுக்கும் போது சிலர் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். வீட்டில் படுக்கை அறையில் முதலிரவு கொண்டாடிய தம்பதி மாரடைப்பில் மரணமடைந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த புதுமணத்தம்பதியினர் ஹனிமூன் சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கி மரணமடைந்த தம்பதியின் பெயர் லோகேஷ்வரன், விபூஷ்னியா என்பதாகும். லோகேஷ்வரன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். மருத்துவரான இவர் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த விபூஷ்னியாவை காதலித்தார். பல ஆண்டு காதல் திருமணத்தில் முடிந்தது. பெற்றோர் சம்மதத்துடன் உற்றார்கள் உறவினர்கள் புடைசூழ கடந்த வாரம் சேலத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில் ஹனிமூன் செல்ல முடிவு செய்தனர். மாலத்தீவு, பாலி தீவு போன்றவைகளை செலக்ட் செய்த நிலையில் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு ஹனிமூன் சென்றனர். உற்சாகமாக பல இடங்களையும் சுற்றிப்பார்த்தனர். மகிழ்ச்சியாக இருந்த அந்த தம்பதியினருக்கு எமன் படகு வடிவில் காத்திருக்கிறான் என்று தெரியாமல் போனதுதான் சோகம். கடற்கரைக்கு சென்ற லோகேஷ்வரன் விபூஷ்னியா தம்பதியினர் விரைவு மோட்டார் படகில் சாகச பயணம் மேற்கொண்டனர். திடீரென விபத்தில் சிக்கியது. படகு கவிழ்ந்தது தண்ணீருக்குள் இருவருமே மூழ்கி உயிரிழந்தனர். பல ஆண்டுகள் காதலித்து ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் முடித்து ஹனிமூன் சென்ற இடத்தில் இருவருமே ஜலசமாதியானது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.