
“அலிபாபாவும் மாயமான ஓனரும்..” தள்ளாடும் நிறுவனத்தை மீட்பாரா புது சிஇஓ! சீனாவில் என்ன நடந்தது
பெய்ஜிங்: ஒரு காலத்தில் சீன தொழிற்துறையின் முகமாக இருந்த ஜாக் மா மற்றும் அலிபாபா நிறுவனம் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் நிலையில், கம்பேக் கொடுக்க அலிபாபா அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சீனாவில் இப்போது ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அவர் அதிகாரங்களைக் குவித்து வருகிறார். அங்குக் கடந்த பல ஆண்டுகளில் எந்தவொரு அதிபரும் இவ்வளவு வலிமையான தலைவராக இருந்தது இல்லை.
எந்தவொரு தலைவரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்று விதிமுறை இருந்த நிலையில், எப்போதும் அதிபர் பதவியில் தொடரும் வகையில் அதை மாற்றிக் கொண்டார்.
கம்பேக்: இது மட்டுமின்றி கட்சிக்குள் அல்லது நாட்டில் தனக்கு எதிர்ப்பு கிளம்பினால், அதை நசுக்குவதையும் ஜி ஜின்பிங் வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படிச் சிக்கியவர்களில் ஒருவர் ஜாக் மா.. ஒரு காலத்தில் சீனாவின் டெக் துறையின் முகமாக இருந்த ஜாக் மா இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போய்விட்டது. அவர் ஆரம்பித்த அலிபாபா நிறுவனம் இப்போதும் சீனாவில் டாப் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், ஜாக் மாவை காலி செய்துவிட்டனர். இதற்கு அவர் சொன்ன சில கருத்துகளே காரணம். 2020இல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாக் மா, சீனா வேகமாக வளர பல சீர்திருத்தங்கள் தேவை என்றும் சீன வங்கிகள் அடகுக்கடை மனநிலையுடன் செயல்படுவதாக விமர்சித்தார். இதுவே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. அதன் பிறகு ஒட்டுமொத்த சீன விசாரணை அமைப்புகளும் ஜாக் மா பக்கம் திரும்பியது. ஜாக் மாவின் Ant நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட இருந்த நிலையில், அது கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு ஜாக் மா சைலண்டாகவே இருந்தார். அவர் நாட்டை விட்டே வெளியேறிவிட்டதாகவும் அவர் இப்போது ஜப்பானில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனத்தின் சிஇஓவாக டேனியல் ஜாங்கிற்குப் பதிலாக எடி யோங்மிங் நியமிக்கப்பட்டுள்ளார். 48 வயதான இவரது நியமனம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. யோங்மிங் 1996இல் பட்டம் பெற்ற பிறகு ஜாக் மாவின் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனமான சீனா பேஜஸில் டெவலப்பர்களில் ஒருவராக சேர்ந்தார்.
புது சிஇஓ: அதன் பிறகு ஜாக் மாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராகவே இருந்தார். பல சவால்களைச் சந்தித்த போதிலும் ஜாக் மாவுக்கு பக்கபலமாக இருந்தார். நிறுவனத்திலும் பல முக்கிய பதவிகளை அடைந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த 2015இல் அலிபாபாவில் இருந்து வெளியேறி அவர் சொந்தமாக முதலீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். அலிபாபா நிறுவனத்தில் இருந்து வந்த பலர் தொழில் தொடங்க இவர் முதலீடுகளையும் செய்துள்ளார்.
இந்தச் சூழலில் தான் சுமார் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் அலிபாபா நிறுவனத்திற்குத் திரும்பியுள்ளார். இந்த முறை சிஇஓ ஆக.. அலிபாபா நிறுவனம் இப்போது பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. பல தளங்களில் அது விரிவுபடுத்தியுள்ள நிலையில், அதன் லாபத்தில் அடிவாங்கியுள்ளது. எனவே, புதிய சிஇஓ மீண்டும் அலிபாபாவின் வருமானத்தை அதிகரிக்கவே நடவடிக்கை எடுக்கவுள்ளார். குறிப்பாக இ காமர்ஸில் அவர் அதிக கவனம் செலுத்தப் போகிறார் எனத் தெரிகிறது.
கம்பேக் கொடுக்குமா: ஜாக் மா இப்போது அதிகாரப்பூர்வமாக அலிபாபா நிறுவனத்தில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை என்ற போதிலும், அவரும் புதிய சிஇஓவுக்கு உதவுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், ஏஐ க்ளவுட் கம்பியூட்டிங், வீடியோ உள்ளிட்ட பிரிவுகளிலும் வரும் காலத்தில் அவர் கவனம் செலுத்துவார் என்றே தெரிகிறது. இதன் மூலம் அலிபாபா கம்பேக் கொடுக்குமா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.